Published:Updated:

`டூ வீலருக்கு டியூ கட்டலை...' - வண்டிபோன விரக்தியில் 9 டூ வீலர்களை தீவைத்து எரித்த இளைஞர்!

இளைஞர் கைது

இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதத் தவணையில் வாங்கிய டூ வீலருக்குப் பணம் கட்டவில்லை என்பதால், ஃபைனான்ஸ் கம்பெனியினர் மணிகண்டனின் டூ வீலரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

`டூ வீலருக்கு டியூ கட்டலை...' - வண்டிபோன விரக்தியில் 9 டூ வீலர்களை தீவைத்து எரித்த இளைஞர்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதத் தவணையில் வாங்கிய டூ வீலருக்குப் பணம் கட்டவில்லை என்பதால், ஃபைனான்ஸ் கம்பெனியினர் மணிகண்டனின் டூ வீலரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

Published:Updated:
இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் இரவு வீட்டின் வாசல்களிலும், தெருவோரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர்கள் நள்ளிரவில் மர்ம நபரால் தொடர்ந்து தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டி.வி.எஸ் எக்ஸ்.எல் 6, பஜாஜ் டிஸ்கவர் 1, பஜாஜ் 1, பல்சர் 1 என மொத்தம் 9 டூ வீலர்கள் இரவில் தீவைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் எரியோடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். 

எரிந்த டூ வீலர்
எரிந்த டூ வீலர்

அதனடிப்படையில், போலீஸார் டூ வீலர் உரிமையாளர்களிடம் தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றனவா அல்லது கோயில் வழிபாடு, இரு பிரிவினரிடையே பிரச்னைகள் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். டூ வீலர்கள் எரிக்கப்பட்ட பகுதி கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், கண்காணிப்பு கேமராக்களும் அங்கு பொருத்தப்படவில்லை. இதனால் டூ வீலர்களுக்கு தீவைப்பது தனி நபரா அல்லது கும்பலா என்பதைக்கூட அறிய முடியாமல் திணறினர். 

இதனால் போலீஸார் எரியோடு வடக்குத் தெரு, துரைசாமி நாடார் தெரு, நடுத்தெரு ஆகிய மூன்று தெருக்களிலுள்ள எட்டு சந்துகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினர். அக்டோபர் 31-ம் தேதி இரவு எரிக்கப்பட்ட டூ வீலர்களின் உரிமையாளர்களான மலைக்கோயில் தெருவைச் சேர்ந்த மின் ஊழியர் சேகர், துரைசாமி நாடார் தெரு வியாபாரி கோபால் ஆகியோர் எரியோடு போலீஸாரிடம் புகார் அளித்தனர். 

பாதி எரிந்த பல்சர்
பாதி எரிந்த பல்சர்

இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, துரைசாமி நாடார் தெருவைச் சேர்ந்த தச்சுத் தொழியாளியான மணிகண்டன் (28) என்ற இளைஞர் டூ வீலர்களுக்கு தீவைப்பது தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சியில் மணிகண்டன் சிகரெட் பிடித்துக்கொண்டே வருகிறார். ஒரு டூ வீலர் அருகே வந்து பெட்ரோல் டியூப்பைப் பிடுங்கி பெட்ரோலைத் தெளித்து தீவைக்கிறார்.

எரிந்த டூ வீலர்
எரிந்த டூ வீலர்

பிறகு அங்கிருந்து சென்றவர், வேறு சட்டையை அணிந்துகொண்டு மீண்டும் அதே தெருவுக்கு வந்து வேறொரு டூ வீலருக்குத் தீவைத்துவிட்டு சாவகாசமாக சிகரெட் பிடித்துகொண்டே நடந்து செல்கிறார். அந்தப் பகுதியில் ஒன்பது டூ வீலர்களை எரித்தது மணிகண்டன் என்பதை உறுதிசெய்த போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்

போலீஸார் மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், மணிகண்டன் 8-ம் வகுப்பு மட்டுமே படிந்திருந்தாலும், கார்பென்ட்டர் தொழிலை நேர்த்தியாகச் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார். அவரின் தாய், தந்தையரும் மிகவும் அமைதியானவர்கள். மணிகண்டனும் அவர்களைப்போலவே வேலைக்குச் செல்வதும்... வீடு திரும்புவதுமாக இருந்திருக்கிறார். இதனால்தான் அவர்மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவே இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதத் தவணையில் வாங்கிய டூ வீலருக்குப் பணம் கட்டவில்லை என்பதால், ஃபைனான்ஸ் கம்பெனியினர் மணிகண்டனின் டூ வீலரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

மணிகண்டன்
மணிகண்டன்

இதனால் மனமுடைந்த மணிகண்டன் தினமும் அதிகமாகக் குடித்திருக்கிறார். நள்ளிரவு தூக்கம் வராமல் இருந்த அவர், தெருக்களில் சிகரெட் பிடித்தவாறு நடந்துகொண்டே இருந்திருக்கிறார். அப்போது கண்ணில் தென்படும் டூ வீலர்களின் பெட்ரோல் டியூப்பை பிடுங்கி பெட்ரோலை வண்டிகளில் தெளித்து தீ வைத்திருக்கிறார்.

மணிகண்டனைக் கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.