சென்னை கே.கே நகர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேசமுத்து (53). இவர் கடந்த 7-ம் தேதி இரவு வழக்கம் போல வீட்டில் தூங்கினார். 8-ம் தேதி காலையில் தேசமுத்து கண்விழிக்கவில்லை. அதனால் அவரின் குடும்பத்தினர் தேசமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தேசமுத்துவை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரின் கழுத்தில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் தேசமுத்துவின் சகோதரர் புகாரளித்தார். அதில் தேசமுத்துவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தேசமுத்துவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைனக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தேசமுத்துவின் மரணம் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இறந்து போன தேசமுத்துவுக்கு மனைவி, மகன்கள், மகள்கள் உள்ளனர். தேசமுத்து பெயின்டிங் வேலை செய்து வந்தார். இவர் குடி பழக்கத்துக்கு அடிமையானவர். மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தேசமுத்து, மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டு வந்துள்ளார். அதை தேசமுத்துவின் மூத்த மகன் டேவிட் என்கிற விஜய் தட்டி கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று மனைவியை தகாத வார்த்தைகளால் தேசமுத்து பேசியபோது மூத்த மகன் விஜய் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவரும் தூங்க சென்றுவிட்டனர். நள்ளிரவில் கண்விழித்த விஜய், தந்தை மீதான ஆத்திரத்தில் செல்போன் சார்ஜர் ஓயரால் தேசமுத்துவின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் எதுவும் நடக்காததது போல அமைதியாக இருந்திருக்கிறார். தேசமுத்துவின் கழுத்து நெரிக்கப்பட்ட தகவல் பிரேத பரிசோதனை மூலம் எங்களுக்கு தெரியவந்தது. அதையடுத்த, விசாரித்தபோதுதான் விஜய் சிக்கினார். விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.