சேலம் சூரமங்கலம், முல்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தியாகலிங்கம்-ராஜலெட்சுமி தம்பதியர். இவர்கள் சூரமங்கலம் அருகே `காபி ஸ்டாப்’ என்னும் கடை ஒன்று நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் பெயர் தனஸ்ரீயா. இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திராஜ் என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. தன் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனஸ்ரீயா தன் தாய் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனஸ்ரீயா கடந்த ஜூன் 11-ம் தேதி தன்னுடைய கணவர் தன்னை அழைப்பதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே தனஸ்ரீயா மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்திருக்கிறார். இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவுசெய்து, தனஸ்ரீயாவின் கணவர் கீர்த்திராஜைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து தனஸ்ரீயாவின் தந்தையைச் சந்தித்துப் பேசினோம். ``அநியாயமா எங்க பொண்ணை இப்படிக் கொன்னுட்டாங்களே... கல்யாணம் பண்ணி மூணு மாசம்தான் எங்க பொண்ணு நிம்மதியா இருந்துச்சு. அதுக்கப்புறம் அடிக்கடி அவங்க மாமியார், மாமனார், வீட்டுக்காரர்லாம் பணம் கேட்டு அடிச்சு துரத்தி விட்டுடுவாங்க.
எங்க பொண்ணு எங்ககிட்ட சொல்ல முடியாம வந்து கண்ணீர்விடும். அதையும் சரிபண்ணி அவங்க கேட்குற பணத்தைக் கொடுத்து அனுப்புவோம். அப்படியும் சும்மா இருக்க மாட்டாங்க. `வீடு வேணும், கார் வேணும்'னு தனஸ்ரீயாட்ட திரும்பவும் சண்டை போட்டாங்க. நாங்க `கொஞ்சம் பொறுமையா இருங்க வாங்கித்தறோம்'னு சொல்லியிருந்தோம்.

ஆனா, அவங்க அதையெல்லாம் பொருட்படுத்திக்கவே இல்லை. என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்து மூணு வருஷமாகுது. இன்னைக்குத்தான் எங்க பொண்ணோட கல்யாணம் தினம். அதைக் கொண்டாடுறதுக்கு இன்னைக்கு அவளை இல்லாம ஆக்கிட்டாங்களே..." என்று கண்கலங்கினார் தனஸ்ரீயாவின் தந்தை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், ``தனஸ்ரீயா 10-வது படிக்குறதுல இருந்தே, என்னுடைய நீண் கால நண்பர் ஆட்டோ பெரியசாமி என்பவர் தன்னுடைய மகனுக்குக் கல்யாணம் பண்ணித்தர சொல்லி கேட்டுக்கிட்டு இருந்தாரு. நானும் நெருங்கிய நண்பராக இருக்கிறாரேனு `காலேஜ் படிச்சு முடிக்கட்டும் பார்ப்போம்’னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் தனஸ்ரீயா காலேஜ்லாம் படிச்சு முடிச்சுட்டு சென்னையில ஒரு வருஷம் வேலை பார்த்துக்கிட்டு இருந்தா. அப்பறம் நாங்க கல்யாணப் பேச்சு எடுத்தவுடனே வேலையை விட்டுட்டு எங்களோட வந்து இருந்தா. அப்போதான் பெரியசாமி மீண்டும் அவரோட பையனுக்குப் பொண்ணு கேட்டு வந்தாரு. சரின்னு பையனைப் பத்தி விசாரிச்சப்போ கோயம்புத்தூர்ல ஒரு தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியில வேலை பார்க்குறாருனு தெரியவந்துச்சு. நாங்களும் கல்யாணத்துக்குச் சம்மதிச்சு 2019-ல கல்யாணம் பண்ணுனோம். கல்யாணத்துக்கு என்னோட தகுதிக்கு 50 பவுன் நகை போட்டு கல்யாணத்தை நடத்தினேன். என் பொண்ணு கல்யாணம் சாதரணமா நடந்து முடிஞ்சுடக் கூடாதுனு, கல்யாணத்தன்னிக்கி மாப்பிள்ளையும் பொண்ணும் திருமணம் மண்டபம் வரை ஸ்கூட்டியில் தலைக்கவசம் அணிந்துவந்து விழிப்புணர்வு கொடுத்தாங்க. இப்படில்லாம் என் பொண்ணைப் பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். கடைசியில என் பொண்ணை இப்படிப் பண்ணிப்புட்டாங்க.
கடந்த ஜூன் 4-ம் தேதி தனஸ்ரீயாவை அவரோட கணவர் கீர்த்திராஜ் ஆடி கார் வாங்கித்தரச் சொல்லி காதில் அடித்திருக்கிறார். என் பொண்ணு அடிதாங்க முடியாம எனக்கு கால் பண்ணி சொன்னா. நான் உடனே வீட்டுக்கு வரச் சொன்னேன். அவ வந்தோவுடனே ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போய் காமிச்சேன். அதுல காதுல ஜவ்வு கிழிஞ்சிட்டதா சொல்லி டாக்டர் மருந்து எழுதிக் கொடுத்திருந்தாரு. கொஞ்சம் காது சரி ஆகுற வரைக்கும் வீட்டுலவெச்சுப் பாத்துக்கலாம்னு, அவளை எங்க வீட்டுலயே இருக்கச் சொன்னேன். கடந்த ஜூன் 11-ம் தேதி நானும் என் மனைவியும் கடையில இருந்தோம். அப்போ சாயங்காலம் 5 மணி இருக்கும்... என் மனைவிக்கு தனஸ்ரீயா கால் பண்ணி, `அம்மா என் வீட்டுக்காரர் கூப்பிடுறாரு, நான் போறேன்'னு சொல்லியிருக்கா. அதுக்கு என் மனைவி, `வேணாம்மா போக வேணாம். திரும்பவும் சண்டை போடுவங்க. நீ போகாத'னு சொல்லியிருக்காங்க, அதுக்கு என் பொண்ணு, `அவரு நல்லாத்தாம்மா பேசுறாரு. சண்டை போட மாட்டேன்னு சொல்லிட்டாரு'னு சொல்லிட்டுப் போனா. ஆனா என் மகளை ஆசைவார்த்தையெல்லாம் சொல்லி வரவெச்சு... கிரிக்கெட் மட்டையாலேயே அடிச்சுக் கொன்னுபோட்டான் அந்தப் படுபாவி.

எங்களுக்கு நைட் 10:30 மணிக்குத்தான் தெரியவந்துச்சு, என் பொண்ணு இறந்துட்டான்னு. நாங்க போறப்ப ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டியெல்லாம் நிக்கிறதைப் பார்த்துட்டு உள்ளுக்குள்ள வெலவெலத்துப்போச்சு. வீட்டுக்குள்ள போய் பார்த்தப்போ என் பொண்ணு ரத்த வெள்ளத்துல மூச்சுப் பேச்சு இல்லாமக் கிடந்ததைப் பார்த்து பதறிப்போய் நானும், என் மனைவி மகனெல்லாம் அழுதுக்கிட்டு இருந்தோம். ஆனா, என் பொண்ணோட வீட்டுக்காரன் மரத்தடியில உட்கார்ந்து ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தான். அவனை எங்களால ஒண்ணும் பண்ண முடியலை... என் புள்ளையே போச்சுனு இருந்தோம். ஆனா, அவன் தானா போய் சூரமங்கலம் ஸ்டேஷன்ல ஆஜராகிட்டான். எங்க பொண்ணு சாவுக்குக் காரணமா இருந்த பெரியசாமி, அவர் மனைவி, மகன் எல்லாரையும் கைதுசெய்யணும்... அப்போதான் என் பொண்ணு ஆத்மா சாந்தியடையும்" என்றார் கண்கள் கலங்க.
இது குறித்து சூரமங்கலம் உதவி ஆணையர் (பொறுப்பு) சரவணக்குமாரிடம் பேசினோம். ``தனஸ்ரீயாவுக்கும், கீர்த்திராஜுக்கும் திருமணமாகி மூன்று வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது. இதற்காக இருவரும் மருத்துவச் சிகிச்சை பெற்றுவந்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு தனஸ்ரீயாவை அவர் கணவர் அடித்திருக்கிறார்.

சம்பவத்தன்று தனஸ்ரீயாவைச் சமாதானமாகப் பேசி வரவழைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலைசெய்திருக்கிறார். அதை மறைக்க பெட்ரூமில் உள்ள ஃபேனில் தூக்கு மாட்டி இறந்தது போன்று செட்டப் செய்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார். பின்னர் 10:30 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாகச் சத்தம் போட்டுக் கூச்சலிட்டிருக்கிறார். அதன் பிறகு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, தனஸ்ரீயா ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அதையடுத்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, கணவர் கீர்த்திராஜைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம்" என்றார்.