Published:Updated:

வெளிநாட்டு அழைப்புகளைவைத்து மோசடி; போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய இளைஞர் சிக்கியது எப்படி?

போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் - கைது

சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் பஷீர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டு அழைப்புகளைவைத்து மோசடி; போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்திய இளைஞர் சிக்கியது எப்படி?

சர்வதேச போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் பஷீர் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் - கைது

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்த தனியார் தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனம் ஒன்றின் நோடல் அலுவலர், சட்டத்துக்குப்புறம்பாக டெலிகாம் எக்ஸ்சேஞ்சுகள் சென்னையில் செயல்படுவதாகப் புகாரளித்தார். அந்தப் புகாரில், போலி எக்ஸ்சேஞ்கள் மூலம் தங்களின் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்க உத்தரவிட்டார்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

இதையடுத்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, சைபர் க்ரைம் போலீஸ் துணை கமிஷனர் கிரன் ஸ்ருதி மேற்பார்வையில் சைபர் க்ரைம் போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிம்கார்டுகள், மோடம்கள் கொண்ட ஒன்பது சிம் பாக்ஸ்கள் மூலம், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றப்படும் போலி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அதை நடத்திவந்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த பஷீரை போலீஸார் கைதுசெய்தனர். அவர் அளித்த தகவலின்படி ராயப்பேட்டை, சி.ஐ.டி நகர் ஆகிய இடங்களில் போலி எக்ஸ்சேஞ்ச்கள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்து ஆறு சிம் பாக்ஸ்கள், சிம்கார்டுகள், மோடம்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கைதான பஷீருக்கும் சவுதியிலிருக்கும் அப்துர் ரகுமான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்துர் ரகுமான் மூலம் சிம்கார்டுகள், மோடம்கள்கொண்ட சிம் பாக்ஸ்களை பஷீர் வாங்கியிருக்கிறார். பின்னர், அதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் இன்டர்நேஷனல் அழைப்புகளை உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறது. இதன் மூலம் இந்தக் கும்பல் லட்சக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துவந்திருக்கிறது.

பஷீர்
பஷீர்

ஏற்கெனவே 2022-ம் ஆண்டு அமைந்தகரையிலுள்ள இரண்டு வீடுகளில் சோதனை நடத்தியதில் நான்கு சிம் பாக்ஸ்கள், 130 சிம்கார்டுகள், இரண்டு மோடம்கள், ஒரு லேப்டாப், நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரைக் கைதுசெய்தோம். அவர் அளித்த தகவலின்படி மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட வேலூர் மாவட்டம், குணவட்டத்தைச் சேர்ந்த சல்மான் ஷெரீப்பைக் கைதுசெய்தோம். தற்போது மீண்டும் போலி எக்ஸ்சேஞ்ச் நடத்தியதாக பஷீர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.