Published:Updated:

ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்!
திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்!

பள்ளிச் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அத்துமீறிய இளைஞரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், ஆவடியிலுள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். சிறுமி வசிக்கும் அதே தெருவில், அவரின் உறவினர் ஜோதி (24) என்ற இளைஞரும் வசித்துவந்திருக்கிறார். உறவினர்களான இருவரும் கடந்த ஓராண்டு காலமாகக் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இளைஞர் ஜோதி, சிறுமியைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததால் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜோதி, திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமியும் உறவினர் ஜோதி தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து தனது பெற்றோரிடம் கூறாமல் மறைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், வழக்கம்போல் ஜோதி சிறுமியின் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

கைது செய்து சிறையில் அடைப்பு
கைது செய்து சிறையில் அடைப்பு

இந்தநிலையில், கடந்த வாரம் சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அருகிலுள்ள கிளினிக்குக்குச் சிறுமியை அழைத்துச் சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்திருக்கின்றனர். இருப்பினும், வயிற்றுவலி தொடர்ந்து இருந்து வந்ததால் சில நாள்களுக்கு முன்பு ஆவடியிலுள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சிறுமியை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கின்றனர். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது, சிறுமி அழுதபடி நடந்தவற்றைக் கூறி உறவினர் ஜோதிதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் ஜோதி மீது புகார் அளித்தனர். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இளைஞர் ஜோதி தன் வீட்டிலிருந்து தலைமறைவானார். இந்தநிலையில், மகளிர் போலீஸார் நேற்று தலைமறைவாக இருந்த ஜோதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவது, பொதுமக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு