Published:Updated:

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று பைக் ரேஸ்! - சிசிடிவி-யால் சிக்கிய இளைஞர்கள்

கைது

கிறிஸ்துமஸ் தினத்தன்று பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து அவர்களின் பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தன்று பைக் ரேஸ்! - சிசிடிவி-யால் சிக்கிய இளைஞர்கள்

கிறிஸ்துமஸ் தினத்தன்று பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து அவர்களின் பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

Published:Updated:
கைது

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) அதிகாலை 1:30 மணியளவில் பைக்கில் சென்னை அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் பகுதியில் சுமார் பத்து பைக்குகளில் ரேஸில் சிலர் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். போலீஸாரைப் பார்த்ததும் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

சரண்ராஜ்
சரண்ராஜ்

இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை பைக்குகளின் பதிவு எண் அடிப்படையில் கண்டறிந்தனர். பைக் ரேஸில் ஈடுபட்ட குற்றத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆகாஷ் (19), அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்கிற டேவிட் (19) ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து திருவல்லிக்கேணி அண்ணாசாலை பகுதியில சுமார் 6 பைக்குகளில் ரேஸில் ஈடுபட்டவர்களை அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தேடிவந்தனர். அதில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பிரதீப் (21), ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது அராபத் (21), அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற அருள் வாசன் (20), ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சையது அராபாத்
சையது அராபாத்

கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்துவம் வகையில் அதிவேகமாகவும் அபாயகரமாகவும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்திருக்கிறார்கள்.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பண்டிகைத் தினத்தன்று இதைப் போல பைக் ரேஸில் சிலர் வாடிக்கையாக ஈடுபட்டு வருகிறார்கள். அதைத் தடுக்க பல நடவடிக்கை எடுத்துள்ளோம். பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் தங்களுக்குள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பை வைத்துக் கொண்டு அதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். திடீரென பைக் ரேஸில் அவர்கள் ஈடுபடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால்தான் இந்தத் தடவை சிசிடிவி மூலம் பைக் ரேஸ்களைப் பிடித்திருக்கிறோம். புத்தாண்டு தினத்தன்றும் சென்னையில் பைக் ரேஸ் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.