புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனையைத் தடுக்க போலீஸ் கமிஷனர் எம்.ரவி உத்தரவிட்டார். அதன்படி தாம்பரம் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையங்கள், கஞ்சா விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடந்திவருகின்றன. இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் ஓஎம்ஆர் சாலையில் கல்லூரி மாணவர்களுக்கும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கும் உணவு டெலிவரியைப்போல கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகரணை காவல் மாவட்டத்தின் துணை கமிஷனர் பொறுப்பு குமார் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி துணை கமிஷனர் சிங்காரவேலன், கானத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.வேலு ஆகியோரின் தலைமையில் தாழம்பூர் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், தலைமைக் காவலர்கள் இளையராஜா, சுதர்சன், சந்திரசேகரன், காவலர்கள் பிரபாகரன், சதீஸ் ஆகியோர்கொண்ட தனிப்படை போலீஸார் கடந்த 21.1.2022-ம் தேதி ஓஎம்ஆர் சாலை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது அங்குள்ள ஒரு கடை முன்பு இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி விற்பனையாளர்போல நின்றுகொண்டிருந்தார். அவரின் அருகில் சென்ற இளைஞர்கள், கஞ்சா வாங்கிக்கொண்டு சென்றனர். அதை கவனித்த தனிப்படை போலீஸார் உணவு டெலிவரி விற்பனையாளர் உடையணிந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் பிரகாஷ்குமார் (30), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிரகாஷ்குமார், காவலாளியாக வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீஸாரிடம் சிக்காமலிருக்க உணவு டெலிவரி விற்பனையாளர்போல பிரகாஷ்குமார் ஓஎம்ஆர் சாலை பகுதியில் பைக்கில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அதையடுத்து அவரை போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ்குமாருக்கு எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்று விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. பிரகாஷ்குமாரைப் பிடித்த தனிப்படை போலீஸாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி பாராட்டியுள்ளார்.