Published:Updated:

`ஹாய் பேபி.. நான் கௌசல்யா!'- இன்ஸ்ட்ராகிராமில் சென்னை சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த பட்டதாரி

இன்ஸ்ட்ராகிராமில் போலி கணக்கு தொடங்கிய பட்டதாரி
இன்ஸ்ட்ராகிராமில் போலி கணக்கு தொடங்கிய பட்டதாரி

இன்ஸ்ட்ராகிராமில் பெண்ணின் பெயரில் போலிக் கணக்கைத் தொடங்கிய பட்டதாரி வாலிபர், 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த 16 வயது சிறுமியின் தாய், அதிர்ச்சிப் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், `என்னுடைய மகளுக்கும் மணலி புதுநகரைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாகப் பழகிவந்த நிலையில், மகேஷின் சில நடவடிக்கைகள் என் மகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

சிறுமி
சிறுமி

இந்த நிலையில், கௌசல்யா என்பவர் இன்ஸ்ட்ராகிராமில் என் மகளுக்கு அறிமுகமாகியுள்ளார். அவருடன் என் மகள் பேசிவந்தநிலையில் மகளின் செல்போனுக்கு சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்று வந்துள்ளது. அதைப்பார்த்து என் மகள் அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோவை வைத்து என் மகளுக்கு பாலியல்ரீதியான தொல்லைகளை மகேஷ் கொடுத்துவருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட மகேஷிடமும், பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடந்தது. சிறுமியின் செல்போனுக்கு வந்த வீடியோ, மகேஷின் செல்போனிலிருந்து அனுப்பப்பட்டதை போலீஸார் முதலில் உறுதி செய்தனர். அடுத்து மகேஷிடம் விசாரணை நடந்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

மகேஷ்
மகேஷ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``இன்ஸ்ட்ராகிராம் மூலம் மகேஷுக்கும் அந்தச் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக இருவரும் பழகிவந்தநிலையில் மகேஷின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததும் சிறுமி, அவருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார். ஆனால், மகேஷ், தொடர்ந்து சிறுமியிடம் பேச பலதடவை முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, சிறுமியிடம் பேச புது ரூட் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

கௌசல்யா என்ற பெயரில் போலிக் கணக்கை இன்ஸ்ட்ராகிராமில் தொடங்கிய மகேஷ், அதன்மூலம் சிறுமிக்கு நான் கௌசல்யா என்று மெசேஜ் செய்யத் தொடங்கியுள்ளார். பெண்ணின் புகைப்படம் இருந்ததால் சிறுமியும், பதிலுக்கு சேட்டிங் செய்துள்ளார். இருவரும் தோழிகளாகப் பழகி வந்தனர். ஹாய் பேபி என்று உரிமையோடு இருவரும் பழகினர்.

ஆனால், ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ளவில்லை. கௌசல்யா என்ற அக்கவுன்டிலிருந்து பேசும் மகேஷ், தன்னை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க புத்திச்சாலித்தனமாகச் செயல்பட்டுவந்துள்ளார்.

Vikatan

இந்தச் சூழ்நிலையில் சிறுமியிடம் பெண் குரலில் மகேஷ் பேசியுள்ளார். அதனால் சிறுமிக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை. தோழிகள் இருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பகிரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சமயத்தில் ஒரு வீடியோவை வைத்துக்கொண்டு சிறுமியை மிரட்டத் தொடங்கினார். சிறுமியின் செல்போனுக்கு அந்த வீடியோவை கௌசல்யா என்ற பெயரில் மகேஷ் அனுப்பியபோதுதான் அதிர்ச்சியில் உறைந்தார் சிறுமி.

மகேஷின் தொடர் டார்ச்சரால் சிறுமி மனவேதனையடைந்துள்ளார். ஒருகட்டத்தில் எல்லை மீறவே, வேறுவழியின்றி நடந்த விவரங்களைத் தன்னுடைய தாயாரிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அந்த வீடியோவையும் பார்த்துள்ளார். இதையடுத்துதான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Vikatan

புகாரின்பேரில் இருவரிடம் விசாரித்தபோது சிறுமிக்கு மகேஷ், பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மகேஷின் செல்போனிலிருந்த வீடியோவை அழித்ததோடு அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

மகேஷிடம் போலீஸார் விசாரித்தபோது, ``நான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். இன்ஸ்ட்ராகிராம் மூலம் சிறுமியும் நானும் பழகினோம். திடீரென என்னைவிட்டு அவர் விலகிவிட்டார். அதனால்தான் கௌசல்யா என்ற பெயரில் அக்கவுன்ட்டை தொடங்கி அவருடன் பழகினேன். அப்போது எனக்கொரு வீடியோ கிடைத்தது. அதை வைத்து சிறுமியை மிரட்டினேன். அதனால் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு