ராமநாதபுரம் மாவட்டம், கான்சாகீப் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு வீட்டின் முன் கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் கட்டிப் போட்டிருந்த நாய் காணாமல் போயுள்ளது.
பின்னர் வெளியே வந்து பார்த்தபோது, முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நாய் தெருவில் இறந்து கிடந்ததுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அடையாளம் தெரியாத 6 பேர் தன்னுடைய நாயை கட்டையால் கொடூரமாக அடித்து கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதையடுத்து, இது குறித்து கேணிக்கரை போலீஸில் ஜனார்த்தனன் புகார் செய்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் நாயைக் கொலைசெய்த ராமநாதபுரம் பாம்புராணி பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (21), அருப்புக்காரதெரு முகமது ரிபாஸ் (21), புள்ளிக்கார தெரு அய்யனார் (18) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ``நாங்கள் நடந்து சென்றபோது அந்த நாய் எங்களைப் பார்த்து குறைத்ததால் ஆத்திரத்தில் அடித்துக்கொலை செய்து விட்டோம்" என அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.