`செல்போன் பிசினஸ்; ரூ.20 லட்சம் மோசடி!’ - ஏமாற்றியவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற கும்பல்

மாலை நேரத்தில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது ஒருவரைத் தலைகீழாகக் கட்டிவைத்து அடித்தது தெரியவந்தது.
திருச்சி அருகே செல்போன் கடை வைத்துக் கொடுப்பதற்காக அக்பர் என்பவரிடம் சேட் என்பவர் பணம் கொடுத்திருக்கிறார். செல்போனும் பணமும் அவரிடமிருந்து வராததால், அவரைத் தலைகீழாகக் கட்டிவைத்து அடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேரைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே செங்கலாக்குடி என்கிற கிராமத்தில் பீரோ தயாரிக்கும் கம்பெனி ஒன்று இயங்கிவருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர் அந்த கம்பெனியிலிருந்து ஒருவரின் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதைக் கேட்ட அந்தப் பகுதி மக்கள் கம்பெனிக்குள் சென்று பார்த்திருக்கிறார்கள். உள்ளே ஒருவர் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார். 10-க்கும் மேற்பட்டவர்கள் அவரைச் சுற்றி இருந்திருக்கிறார்கள். உள்ளே வந்தவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் தப்பிக்க முயன்றிருக்கிறார்கள்.

உடனே அந்தப் பகுதி மக்கள் அவர்களில் ஏழு பேரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பிறகு தொங்கவிடப்பட்டிருந்தவரை இறக்கியிருக்கிறார்கள். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரிந்தது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அவரை அடித்துக் கொன்றதாக ஏழு பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். ``இந்த பீரோ கம்பெனி ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கிறது. மதிய நேரங்களில் புதுப்புது நபர்கள் இங்கு வந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போதே எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் மதிய நேரத்தில் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. வேறு ஏதோ பிரச்னை என்று சாதாரணமாக இருந்துவிட்டோம். மீண்டும் மாலை நேரத்தில் முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், ஊர் மக்களில் சிலர் அங்கு சென்று பார்த்த்திருக்கிறார்கள்.

அங்கே ஒருவரைத் தலைகீழாகக் கட்டிவைத்து அடித்தது தெரியவந்திருக்கிறது. பிறகு, ஊர் மக்கள் அவரை இறக்கிப் பார்த்ததில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. காவல்துறையினருக்குத் தகவல் அளித்தோம். அவர்கள் விசாரணை நடத்திவருகிறார்கள்" என்றனர்.
வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம். ``உயிரிழந்தவர் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த அக்பர் என்பது தெரியவந்துள்ளது. இவர் சேட் என்பவரிடம் செல்போன் கடை நடத்துவதற்காகவும், தொடர்ந்து செல்போன்களை விற்பனை செய்வதற்காக வெளியூர்களில் விலையுயர்ந்த செல்போன்கள் வாங்கித் தருகிறேன் என்று கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியிருக்கிறார். ஆனால், செல்போன் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

பலமுறை சேட், பணத்தைக் கேட்டுப் பார்த்திருக்கிறார். அதற்கும் எந்தவித பதிலையும் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து, சேட் அவரது நண்பர்களான முகமது இப்ராஹிம், காஜா முகமது, வின்சென்ட், அசாருதீன், முகமது ஹபீஸ் உள்ளிட்டவர்களிடம் சொல்லியிருக்கிறார். அவர்கள் அக்பரைக் கடத்தி வந்து, பணத்தைக் கேட்டுக் கடுமையாக அடித்திருக்கிறார்கள். அடிதாங்க முடியாமல் அக்பர் இறந்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்று முடித்துக்கொண்டனர்.