Election bannerElection banner
Published:Updated:

`பவானியை நம்பவைத்தேன்; ரிப்போர்ட்டால் சிக்கிக்கொண்டேன்!' - யாழினியைக் கொன்ற 2வது கணவர் வாக்குமூலம்

yallini
yallini

4 வயது குழந்தை யாழினி, என் சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துவிட்டதாக பெயின்டர் ஆசிப், போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், 4வது தெருவில் யாழினி என்ற குழந்தையைக் கொன்றுவிட்டார்கள் எனக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதன்பேரில் புழல் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் யாழினியின் சடலத்தைக் கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் யாழினி கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

yallini
yallini

இதையடுத்து யாழினியைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆசிப் (25) என்பவரை போலீஸார் நேற்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``நான் கொடுங்கையூரில் குடியிருந்தபோது பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் பவானி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்காக வியாசர்பாடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பந்தல் போட வந்திருந்தார். அப்போது பவானியிடம் அவர் தண்ணீர் கேட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் பழகியுள்ளனர். பவானியை ரமேஷ் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாழினி (4), ராஜேஷ் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

குடித்துவிட்டு பவானியை ரமேஷ் சித்ரவதை செய்துள்ளார். இதனால் ரமேஷை பிரிந்த பவானி, குழந்தைகளுடன் கொடுங்கையூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது பவானிக்கு ஆறுதல் கூறினேன். ஒருவாரத்துக்குள் எனக்கும் பவானிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கொடுங்கையூரில் தனியாகக் குடும்பம் நடத்தினோம். நான் பெயின்டிங் வேலை செய்து பவானியையும் குழந்தைகளையும் காப்பாற்றினேன். இந்தச் சமயத்தில் நானும் பவானியும் சந்தோஷமாக இருப்பதற்கு யாழினி தடையாக இருந்தார். அதைப் பவானியிடம் நான் சூசகமாகக் கூறினேன். ஆனால், யாழினியைப் பிரிய பவானிக்கு மனம் இல்லை.

asif
asif

இந்தச் சமயத்தில் கொடுங்கையூரிலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன் புழல் காவாங்கரைக்கு குடும்பத்தோடு வந்தேன். அங்கேயும் யாழினியால் பவானிக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் யாழினியைக் கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 8-ம் தேதி காலை டீ போடுவதற்கு பால் வாங்க பவானி கடைக்குச் சென்றார். யாழினியும் நானும் வீட்டில் இருந்தோம். யாழினி மீதுள்ள கோபத்தில் அவளைக் காலால் எட்டி உதைத்தேன். இதில் அவள் மயங்கி விழுந்தாள்.

உடனே, அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தேன். ஆனால், யாழினி கண்விழிக்கவில்லை. இந்தச் சமயத்தில் வீட்டுக்கு வந்த பவானியிடம் யாழினி திடீரென மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினேன். அதன் பிறகு, யாழினியைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு யாழினி ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து யாழினியின் சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவந்து, தகனம் செய்ய ஏற்பாடு செய்தோம். நான், யாழினியைக் கொலை செய்தது பவானிக்குத் தெரியாது. நல்லவன்போல நடித்து பவானிக்கு ஆறுதல் கூறினேன். அவரும் என்னை நம்பினார். இந்தச் சமயத்தில்தான் போலீஸார் வீட்டுக்கு வந்து விசாரித்தார்கள். நானும் பவானியும் யாழினி இயற்கையாக இறந்ததாகக் கூறினோம். ஆனால், பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டால் சிக்கிக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.

`4 வயது குழந்தை இறந்தது எப்படி?'- சந்தேக வளையத்தில் தாயின் நண்பன்

இதுகுறித்து புழல் போலீஸார் கூறுகையில், ``யாழினி கொலை சம்பவத்தில் பவானிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால்தான் ஆசிப்பை மட்டும் கைது செய்துள்ளோம். அவரிடம் முதலில் விசாரித்தபோது யாழினி மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகக் கூறினார். ஆனால், யாழினியின் உடலில் காயங்கள் இருந்ததால் ஆசிப் மீது சந்தேகம் இருந்தது. யாழினியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறிய தகவலின்படி ஆசிப்பிடம் மீண்டும் விசாரித்தோம். அப்போதுதான் யாழினியை அவர் எப்படிக் கொலை செய்தார் என்ற தகவலைக் கூறினார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

யாழினியை ஆசிப்தான் கொலை செய்தார் என்ற தகவல் தெரிந்ததும் பவானி, காவல் நிலையத்திலேயே கதறி துடித்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். யாழினிக்கு ஆசிப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தத் தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. பவானியின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் யாழினி இன்று உயிரோடு இல்லை. கைகுழந்தையுடன் பவானி தவித்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் உறவினர்களும் போலீஸாரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு