Published:Updated:

காவலர்களா, கிரிமினல்களா?! - கொலை... கொள்ளை... சிலைக்கடத்தல்... போதைப்பொருள் கடத்தல்...

காவலர்களா, கிரிமினல்களா?!
பிரீமியம் ஸ்டோரி
காவலர்களா, கிரிமினல்களா?!

காவல்துறை சிறப்பாக செயல்படுவதால்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினராக இருந்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

காவலர்களா, கிரிமினல்களா?! - கொலை... கொள்ளை... சிலைக்கடத்தல்... போதைப்பொருள் கடத்தல்...

காவல்துறை சிறப்பாக செயல்படுவதால்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினராக இருந்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
காவலர்களா, கிரிமினல்களா?!
பிரீமியம் ஸ்டோரி
காவலர்களா, கிரிமினல்களா?!

“தமிழக காவல்துறையினரில் 90 சதவிகிதம் பேர் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள்!” - இப்படிச் சொன்னது ஒன்றும் எதிர்க்கட்சியினர் அல்ல... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் தமிழகக் காவல்துறையைப் பற்றிப் பேசிய கடுமையான விமர்சனம்தான் மேற்கண்ட வரிகள். அதை நிரூபிக்கும் வகையில் சமீபகாலமாக தமிழக காவல்துறையினர்மீது பல்வேறு புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதிலும் தென் மாவட்டங்களில் போலீஸார்மீது வரும் பகீர் புகார்களும், கைது நடவடிக்கைகளும் அதிரவைக்கின்றன. கடந்த சில நாள்களில் நடந்த சம்பவங்களைப் பார்ப்போம்...

சம்பவம் 1

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல்வழியாக வெளிநாட்டுக்கு 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் கடத்தப்படவிருப்பதாக ரகசியத் தகவல் வந்ததை அடுத்து, கீழக்கரையைச் சேர்ந்த பாக்கியராஜ், மணிகண்டன் ஆகியோரை மதுரை மண்டல சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பிடித்து விசாரித்தார்கள். அப்போது, சேலத்திலிருந்து ஏழு சாமி சிலைகளைக் கடத்திவந்து, ராமநாதபுரத்திலுள்ள கால்வாயில் ஒளித்து வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். கூடவே, அவர்களின் கூட்டாளிகள் யார் என்பதையும் தெரிவிக்க... சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கோ அதிர்ச்சி! ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் அலெக்சாண்டர், விருதுநகர் மாவட்டத்தில் சஸ்பெண்டான போலீஸ்காரர் இளங்குமரன், திண்டுக்கல் ஆயுதப்படையில் பணியாற்றும் நாகேந்திரன் ஆகியோர் சிலைக்கடத்தல் கூட்டாளிகள்! தற்போது இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இவர்களின் மொபைல் போனை ஆய்வுசெய்ததில், கடத்தல் நெட்வொர்க் விரிந்துகொண்டே போவதாகச் சொல்லப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள், யானைத் தந்தங்கள், வலம்புரி சங்குகள், கோபுரக்கலசங்கள் உள்ளிட்டவற்றை நீண்டகாலமாக இவர்கள் கடத்திவந்திருப்பதை அறிந்து, போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

காவலர்களா, கிரிமினல்களா?! - கொலை... கொள்ளை... சிலைக்கடத்தல்... போதைப்பொருள் கடத்தல்...

சம்பவம் 2

ராமேஸ்வரம் கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்போகிறார்கள் என்று வந்த தகவலை அடுத்து, க்யூ பிரிவு போலீஸார் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 10-ம் தேதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது மதுரையிலிருந்து வந்த பேருந்திலிருந்து பெரிய பையுடன் இறங்கிய பூவந்தி சூரியக்குமார் என்பவரைப் பிடித்து விசாரித்தார்கள். இதில் நைஜீரியாவிலிருந்து வந்த கோகெய்ன் போதைப்பொருளை ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு அவர் கடத்த முயன்றது தெரியவந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோகெய்னின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் என்கிறார்கள் போலீஸார். இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்ற போலீஸ்காரரும் ஒருவர். இதற்கு முன்பு மூன்று முறை பாலமுருகன் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார். இலங்கை கடத்தல்காரர்களிடம் பலமுறை மொபைலில் இவர் பேசியிருக்கிறார் என்கிறார்கள் போலீஸார்!

இளங்குமரன், நாகேந்திரன், பாலமுருகன்
இளங்குமரன், நாகேந்திரன், பாலமுருகன்

சம்பவம் 3

பிப்ரவரி 13. நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி மீது தொடர்ச்சியாக வந்த புகார்களை அடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்மணியின் வீட்டிலும், அவரின் தோழியின் அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள். இதில், வருமானத்தைவிட 171.78 சதவிகிதம் அளவுக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இவர் பணிபுரிந்த இடங்களிலெல்லாம் லஞ்சத்தில் புகுந்து விளையாடியவர், லஞ்சப் பணத்தைத் தன் நண்பர்கள், உறவினர்கள் மூலம் வட்டிக்குவிட்டு பலமடங்கு ஆக்கியிருக்கிறார் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்!

சம்பவம் 4

பிப்ரவரி 14. மதுரை பட்டாலியனில் காவலராகப் பணியாற்றிவந்த திருமுருகனுக்குத் திருமணமாகி, குழந்தை உள்ள நிலையில், தேனி மாவட்ட வனத்துறையில் பணியாற்றும் கணவரை இழந்த சரண்யாவுடன் தொடர்பு ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்துவந்தனர். இது தெரிந்து மனைவி பிரிந்து செல்ல... சரண்யாவைத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியிருக்கிறார் திருமுருகன். ‘திருமணம் வேண்டாம்’ என்று சரண்யா மறுக்க... ஆத்திரமடைந்த திருமுருகன், அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். சரண்டரான திருமுருகனைச் சிறையில் அடைத்துள்ளது போலீஸ்!

இதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், மதுரை நாகமலை இன்ஸ்பெக்டர் வசந்தி, இளையான்குடி வியாபாரியிடம் பத்து லட்ச ரூபாயைப் பறித்த விவகாரத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டார். மதுரை நேதாஜி ரோட்டில் சினிமா பார்த்துவிட்டு நண்பருடன் வந்த இளம்பெண்ணை, ஏட்டு முருகன் மிரட்டி லாட்ஜில் அடைத்து, பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார்.

போலீஸாரே குற்றச் செயல்களில் ஈடுபடுவது பற்றி தென்மண்டல ஐ.ஜி அன்புவிடம் பேசினோம்... ‘‘காவல்துறை சிறப்பாக செயல்படுவதால்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினராக இருந்தாலும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தென்மண்டலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ள நிலையில் ஒவ்வொருவரையும் குளோஸாக வாட்ச் செய்ய முடியாது. அதேநேரம், காவல்துறையினர்மீது துறைரீதியாகவோ, பொதுமக்களிடமிருந்தோ புகார் வரும்பட்சத்தில் அவர்கள் குற்றங்களில் ஈடுபட்டது உறுதியானால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோல காவல்துறையிலும் சிலர் குற்றம்புரிகிறார்கள்... ஆனால், காவல்துறை என்பதால் பெரிதாகத் தெரிகிறது” என்றார்.

உண்மைதான்... காப்பானே கள்வனாகவும் கொலையாளியாகவும் மாறும்போது பெரிதாகத்தான் தெரியும் ஐ.ஜி சார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism