Published:Updated:

பழிக்குப் பழி; பட்டாக்கத்தி; அதிரவைத்த 3 பேர்! - பட்டுக்கோட்டையைப் பதறவைத்த கொலை

கொலை செய்யப்பட்ட ரௌடி சிரஞ்சீவி
கொலை செய்யப்பட்ட ரௌடி சிரஞ்சீவி

எந்த அச்சமுமின்றி கொலை செய்துவிட்டு டூ வீலரில் ஏறிப் புறப்பட்டவர்கள், கொலைக்குப் பயன்படுத்திய பட்டாக்கத்தியைச் சாலையில் கீறியபடியே தீப்பொறி பறக்கச் சென்றிருக்கிறார்கள்.

பட்டுக்கோட்டையில் பட்டப்பகலில் ரௌடி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறாது. மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கும்பல் கொலைக்குப் பின்னர் சாவகாசமாகக் கையில் பட்டாக்கத்தியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கிறது.

திருப்பூர்: `அதிகாலையில் பரிகார பூஜை; கொள்ளைக்காக மூதாட்டி கொலை!’ - அதிர்ச்சி சம்பவம்

இது குறித்து அந்தப் பகுதியில் விசாரித்தோம். ``பட்டுக்கோட்டை பெரிய தெரு எப்போதும் பரபரப்பாக இருக்ககூடிய பகுதி. காசாங்குளம் முதல் சந்து வழியாக பெரியக்கடைத் தெருவுக்கு வரும் பாதையிலுள்ள கடைகளில் கண்டியன் தெரு ஆற்றுக்கரையில் வசித்துவந்த சிரஞ்சீவி (35) என்பவர் நேற்று மாலை பூஜைப் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தார்.

இவருக்குத் திருமணமாகி, ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கிராமத்தில் பிராய்லர் கோழிக்கறிக்கடை நடத்திவந்திருக்கிறார். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்த சிரஞ்சீவி, கோயிலுக்குச் செல்ல முடி கட்டுவதற்கான பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்தார்.

பட்டுக்கோட்டை காவல் நிலையம்
பட்டுக்கோட்டை காவல் நிலையம்

அப்போது டூ வீலரில் அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அரிவாள்,பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களால் சிரஞ்சீவியின் தலைப் பகுதியில் வெட்டினர். இதில் அலறியடித்து ஓடிய சிரஞ்சிவியை அந்தக் கும்பல் துரத்திச் சென்று வெட்டியது. இதில் தலை, முகம் ஆகிய பகுதிகள் முற்றிலுமாகச் சிதைந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சிரஞ்சீவி உயிரிழந்தார்.

மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும், எந்த அச்சமுமின்றி கொலை செய்துவிட்டு டூ வீலரில் ஏறிப் புறப்பட்டவர்கள், கொலைக்கு பயன்படுத்திய பட்டாக்கத்தியைச் சாலையில் கீறியபடியே தீப்பொறி பறக்கச் சென்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்தனர்.

கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி
கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி

இந்தத் தகவல் கிடைத்த பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகள் யார், எதற்காக இந்தக் கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். சிரஞ்சீவியின் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ரௌடிப் பட்டியலிலும் அவர் பெயர் இருப்பதால், பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்துவருகின்றனர். சிரஞ்சீவியை வெட்டியவர்களில் ஒருவனுக்கு 25 வயதுக்குள்தான் இருக்கும்.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையாகிவருகின்றனர். தவறான வழியில் செல்லும் இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, கூலிப்படையினராகப் பயன்படுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

இதேபோல் ரெளடிகள் பல குழுக்களாகச் செயல்பட்டுவருகின்றனர். கிட்டத்தட்ட யார் கேங்க்ஸ்டர் தலைவன் என்கிற ரீதியிலும், நீ பெரியவனா, நான் பெரியவனா என்கிற போட்டியில் பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம். போலீஸாரின் மெத்தனமான செயல்பாடும் இதற்கு முக்கியக் காரணம். உடனடியாக கஞ்சா, ரெளடிகளின் மோதல்கள் ஆகிவற்றைத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே பட்டுக்கோட்டை அச்சமின்றி வாழக் கூடிய ஊராக இருக்கும்’’ என்று நம்மிடம் விவரித்தனர்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பட்டுக்கோட்டைப் பகுதியில் ரெளடிகளுக்குள்ளேயே மறைமுகமாக அடிக்கடி மோதல்கள் நடந்துவருகின்றன. காவல் நிலையத்தில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் போலீஸ் ஒருவர் கடந்த மாதம் ரெளடிகள் சிலரை அழைத்து, `உங்களுக்குள் மோதுவதை நிறுத்திவிட்டு ஒழுங்காக இருங்கள். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்திருக்கிறார்.

சென்னை: சினிமா உதவி இயக்குநர், வீடு புரோக்கர் கொலை!-புத்தாண்டு கொண்டாட்டத்தில் நண்பர்கள் வெறிச்செயல்

2018-ம் ஆண்டு மதுக்கூரைச் சேர்ந்த மைதீன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கான ஸ்கெட்சைப் போட்டுக் கொடுத்து, மூளையாகச் செயல்பட்டவர் சிரஞ்சீவி. அதற்குப் பழிக்குப் பழியாகவே சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு சிரஞ்சீவியின் நண்பவர் ஒருவரிடம் சென்று, `உன் நண்பனைப் போட்டுவிட்டோம். உடம்பைப் போய் அள்ளிக்கடா’ என சொல்லிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

கவின் என்ற இளைஞர் தலைமையில்தான் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கிறோம். குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக மன்னார், விக்ரம் உள்ளிட்ட ரெளடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் கொலை நடந்திருப்பது எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. கவின் டீமுக்கு மன்னார்தான் லீடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலை
கொலை

இறந்த சிரஞ்சீவி, தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில் தெனாவட்டாகவே இருப்பார். எதற்கும் பயப்படாத ஆள். பட்டுக்கோட்டைப் பகுதியில் எந்தக் குற்றச் சம்பவம் நடந்தாலும், இவர் பங்கு நிச்சயமாக இருக்கும். போலீஸார் எச்சரித்த பிறகு சில வருடங்கள் பெங்களூரு சென்ற சிரஞ்சீவி, அதன் பிறகு இங்கு வந்து கோழிக்கடை நடத்திவந்தார்.

இந்தநிலையில்தான் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவ்வப்போது கொடூரமான முறையில் நடக்கும் இது போன்ற கொலைகள் படுக்கோட்டையைப் பதறவைக்கும். ரெளடிகள் அட்டகாசத்தை ஒழிக்க எஸ்.பி-யின் கீழ் செயல்படும் சிறப்புப் படை போலீஸார் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையை தாண்டிவிட்டாலே ரெளடிகளுக்குத் தகவல் சென்று உஷாராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு சில போலீஸாருடன் ரெளடி கும்பல் தொடர்பில் இருப்பார்கள். கஞ்சா விற்பனை புரையோடிப்போய் பட்டுக்கோட்டை மக்களின் நிம்மதியைக் கெடுத்துவருகிறது. போலீஸ் உயரதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மக்களும் அச்சமின்றி இருக்கலாம்’’ எனத் தெரிவித்தனர்.

திருச்சி: வீட்டு வாசலில் பால் பாக்கெட்; பெண் ஜவுளி வியாபாரி கொடூரக் கொலை! - நகைக்காக நடந்த கொடூரம்

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷிடம் பேசினோம். ``கஞ்சா விற்பனையைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறோம். பல்வேறு வழக்குகள் பதிந்து கஞ்சாவை பறிமுதல் செய்துவருகிறோம். கஞ்சா போதையால் இந்தக் கொலை சம்பவம் நடைபெறவில்லை. மோட்டிவ் காரணமாக நடந்திருக்கிறது. மேற்கொண்டு விசாரணை நடந்துவருகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு