Published:Updated:

`1000 போன்கள் டிரேஸ்; காட்டிக்கொடுத்த சிக்னல்!'- புதுக்கோட்டையில் 6 பேர் சிக்கிய பின்னணி

lalitha jewellery
lalitha jewellery

அந்த வீடியோவில் உள்ள கொள்ளையர்கள், உடை மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர்களின் கொள்ளை பாணியை வைத்து, அவர்கள் வட இந்தியத் திருடர்களை ஒத்திருப்பதால், போலீஸார் அந்த நோக்கில் விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில், தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவத்தில், கொள்ளையர்களின் வீடியோ வெளியாகியுள்ளது பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சியில், லலிதா ஜுவல்லரி நகைக்கடை பின்புறமுள்ள தனியார் கல்லூரி மைதானம் வழியே வந்த கொள்ளையர்கள், அங்குள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தை ஒட்டியுள்ள சுவரின் கீழ்ப்பகுதியில், ஆள் நுழையும் அளவிற்குட் துளையிட்டு, உள்ளே நுழைந்துள்ளார்கள். அந்தக் கொள்ளையர்கள் இருவரும், குழந்தைகள் விளையாடும் பொம்மை முகமூடி அணிந்தவாறு, கடந்த 2-ம்தேதி நள்ளிரவு 2.30 மணி முதல் விடியற்காலை 4.30 மணி வரை நகைக் கடைக்குள் இருந்து கொள்ளைச் சம்பவத்தில் கைவரிசை காட்டியுள்ளனர்.

lalitha jewellery
lalitha jewellery

தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியுள்ள, இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், மிக்கி மவுஸ் குல்லா அணிந்து கையுறை மாட்டியபடி நடந்துவரும் புகைப்படங்கள் நேற்று வெளியானது. மேலும் அவர்கள், கொள்ளையடித்த நகைகளை எந்த வழியாக வாகனத்தில் எடுத்துச்சென்றார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரணை தீவிரமடைந்துள்ளது. மேலும், கொள்ளையர்கள் குறித்து திருச்சி மட்டுமல்லாமல் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

`சுவரில் துளை; பலகோடி ரூபாய் நகைகள் மாயம்!' - திருச்சியை அதிர வைத்த கொள்ளை

இந்நிலையில், லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் போடப்பட்ட துளையின் வழியே உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், எவ்வித பதட்டமும் இல்லாமல், கையில் வைத்திருக்கும் பையில் நகைகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கறுப்பு சட்டை அணிந்த கொள்ளையன் ஒருவன் முகமூடி மற்றும் கையுறையுடன் உள்ளே நுழைந்தவர், சுற்றிச்சுற்றி ஆட்கள் குறித்து நோட்டம் விடுகிறார். அவர் வைத்திருக்கும் கைப்பையில், ஒவ்வொரு தங்க நகையையும் எடுத்து எடுத்து வைக்கிறார். அடுத்து, அவரைப் பின் தொடர்ந்து உள்ளே வந்த இன்னொரு கொள்ளையன், கீழ்த்தளத்தில் உள்ள லாக்கரின் கண்ணாடியை அகற்றிவிட்டு மெள்ள மெள்ள அவரும் நகைகளை எடுத்து வைக்கிறார்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

இந்த கொள்ளைச் சம்பவத்தில், துளை வழியே நீளமான கயிறு மூலம் வெளியே இருக்கும் கூட்டாளிகளுக்கு சிக்னல் செய்துகொண்டே கொள்ளையடிக்கிறார்கள். மேலும், கொள்ளையடித்த நகைகளைப் பைகளில் நிரப்பிய அவர்கள், ஸ்க்ரூடிரைவர் உதவியுடன் மேசைகளில் உள்ள லாக்கர்களைச் சத்தமில்லாமல் திறந்து, லாக்கரில் வைக்கப்பட்டுள்ள சாவிகளை எடுத்து மற்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளையும் அடுக்குகிறார் என்பது உள்ளிட்டவை அந்த வீடியோவில் காட்சியாக உள்ளன. அந்த வீடியோவில் உள்ள கொள்ளையர்களின் உடை மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவர்களின் கொள்ளை பாணியை வைத்தும் அவர்கள், வட இந்தியத் திருடர்களை ஒத்திருப்பதால், போலீஸார் அந்த நோக்கில் விசாரித்து வருகிறார்கள்.

ரூ.50 கோடி தங்கம், வைரம்; பொம்மை முகமூடி! - திருச்சியைத் திணறவைத்த அதிகாலை கொள்ளை

கொள்ளையர்கள், நகைக்கடையில் சாவி வைக்கும் இடம் மற்றும் எந்த இடத்தில் துளையிட்டால் சுலபமாகக் கொள்ளையடிக்க முடியும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வீடியோவில் அம்பலமாகி உள்ளது. கடந்த இரு தினங்களாக லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அப்போது வெளியாகி, திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, நேற்றிரவு சந்தேகத்திற்கு இடமாக புதுக்கோட்டை லாட்ஜில் தங்கியிருந்த 5 வடஇந்திய இளைஞர்கள் போலீஸில் சிக்கியுள்ளனர்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

சமீர் ஷேக், அப்ஜூன் ஷேக், முகமது கலீஃப், ஜுவல் சேட், லகுஜன் சேட், மற்றும் ஒருவர் என 6 வெளிமாநில நபர்களை புதுக்கோட்டையில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களை திருச்சிக்கு அழைத்துவந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் 6 பேரும் எப்படி சிக்கினார்கள் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, கொள்ளை நடந்த சமயத்தில், சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமார் 1,000 போன்கள் அங்குள்ள டவர்களில் பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த போன் நம்பர்களை டிரேஸ் செய்துபார்த்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் போலீஸார். அதில் ஒரு போனின் டவர், புதுக்கோட்டையில் சிக்கனல் காண்பிக்க, அந்த இடத்துக்கு போலீஸ் விரைந்துள்ளனர்.

திருச்சி கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தவர்கள் கைவரிசை? - புதுக்கோட்டையில் சிக்கியவர்களிடம் விசாரணை!

சிக்னல் காண்பித்த இடம், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜ். அந்த தனியார் லாட்ஜில்தான் இந்த 6 பேரும் இருந்துள்ளனர். இவர்களில், சமீர் ஷேக் என்பவரின் போன்தான் சிக்னல் காட்டியுள்ளது. போலீஸ் சென்ற நேரம், 6 பேர்களில் ஒருவரான அப்ஜூன் ஷேக் சாப்பாடு வாங்கி வருவதற்காக வெளியே சென்றுள்ளார். சாப்பாடு வாங்கிக்கொண்டு வரும்போது, லாட்ஜின் வெளியே போலீஸ் நிற்பதைப் பார்த்ததும் பதறியடித்து ஓடியுள்ளார். ஏற்கெனவே சந்தேகத்தில் வந்த போலீஸார், இவர் ஓடுவதைப் பார்த்ததும் துரத்திப் பிடித்துள்ளனர்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

அதில், அப்ஜூன் ஷேக்கிற்கு கை கால்களில் பலத்த அடிபட்டதாகக் கூறப்படுகிறது. அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகிறார்கள். பின்பு, லாட்ஜில் இருந்த மேலும் 5 பேரையும் போலீஸார் கைது செய்து, தற்போது திருச்சியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துவருவதாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்களிடமிருந்த செருப்பு, பேக் ஆகியவை சிசிடிவி காட்சிகளுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. எனினும், போலீஸார் அவர்கள் பிடிபட்டது குறித்து அதிகாரபூர்வமாக வெளியிடாமல் வைத்துள்ளார்கள்.

`சூதுகவ்வும்' பட பாணியில் 9 கட்டளைகள்! - டார்கெட் வைத்து செல்போன் திருடிய ஆந்திர கும்பல் தலைவன்

திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார்கோயில் பகுதியில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி இரவு, இதேபாணியில் ஒரு கொள்ளை நடந்தது. வங்கியின் மேற்கூரையில் ட்ரில்லிங் செய்து, 500 சவரன் நகை மற்றும் பலகோடி ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Vikatan
Punjab National Bank
Punjab National Bank

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தமிழகம் வந்தவர்களில், ஒரு கும்பல் கோயம்புத்தூர் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமயபுரம் வங்கிக் கொள்ளைக்கும் திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதையடுத்தே, புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்கு, நகைக்கடை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணை முடிவிலேயே தெரியவரும் என்கிறார்கள்.

பின் செல்ல