Published:Updated:

பாலியல் தொழிலின் கூடாரமா தி.மலை பேருந்து நிலையம்? - கொதிக்கும் ஆன்மிக பக்தர்கள்

கைது செய்யப்பட்ட புரோக்கர்கள்
கைது செய்யப்பட்ட புரோக்கர்கள்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் புரோக்கர்கள் அட்டகாசம் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது.

ஆன்மிக நகரமாக விளங்கி வரும் திருவண்ணாமலையில் பல வருடங்களாகப் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக மக்கள் புகார் வாசிக்கிறார்கள். `குறிப்பாக, திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் புரோக்கர்கள், பயணிகளிடையே அத்துமீறி நடந்துகொள்வதாகவும் கூறுகிறார்கள். இது, மற்ற பயணிகளை முகம்சுளிக்க செய்கிறது' என்கின்றனர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆன்மிக பக்தர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். ``ஆன்மிக பூமியாக விளங்கி வரும் திருவண்ணாமலையில் தற்போது பாலியல் தொழில் பெருகி வருகிறது. திருவண்ணாமலை பேருந்து நிலையம், உழவர் சந்தை பகுதி, சில லாட்ஜ்கள், கிரிவலப் பாதையில் உள்ள சில தனி வீடுகள் எனப் பல இடங்களில் பாலியல் தொழில் நடக்கிறது. மாதாமாதம் பௌர்ணமி நாள்களில், நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் ஆகிவிடும். இந்த நாள்களைப் பயன்படுத்திக்கொண்டு சில பெரிய ஹோட்டல்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்குச் சாட்சியாகத்தான் நேற்று திருவண்ணாமலை செங்கம்ரோடு அத்தியந்தல் கிராமத்தில் உள்ள சோழா ஹோட்டலில் போலீஸார் சோதனை செய்தபோது பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்து, அவர்களைக் கைது செய்தனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில், பாலியல் தொழிலில் ஈடுபாடும் பெண்கள் நேரடியாகவே வந்து பயணிகளுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். இதை எதிர்த்து பயணிகள் யாராவது கேட்டால் புரோக்கர்களை வைத்து மிரட்டுகிறார்கள். அதோடு, அச்சில் எழுதமுடியாத வார்த்தைகளில் வசைபாடுகிறார்கள். இந்த விவகாரம் எல்லாம் பேருந்து நிலைய லிமிட்டில் உள்ள போலீஸாருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

திருவண்ணாமலை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை பேருந்து நிலையம்

சினிமாவில் வரும் போலீஸ்காரர்களைப் போன்று, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடமே சகஜமாகச் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களால், பேருந்து நிலையத்துக்கு வரும் கல்லூரி மாணவர்கள் சீரழிந்து போகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் வேதனையோடு.

இதுசம்பந்தமாகத் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``காவல்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், திருவண்ணாமலை அருகே செங்கம் ரோடு அத்தியந்தல் கிராமத்தில் உள்ள சோழா ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை பேருந்து நிலையம்
திருவண்ணாமலை பேருந்து நிலையம்

அப்போது, பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சய், பிரபாகர், ராமலிங்கம் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த ஜெகன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சக்திராஜா ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு