Published:Updated:

`4 செல்போன்கள்; டைரி; சிசிடிவி கேமரா!’- தஞ்சைப் பாலியல் வழக்கில் சிக்கும் முக்கியப் புள்ளிகள்?

கைது செய்யப்பட்ட செந்தில்குமார், ராஜம் உள்ளிட்டவர்கள்
கைது செய்யப்பட்ட செந்தில்குமார், ராஜம் உள்ளிட்டவர்கள்

`இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 செல்பொன்களைக் கொண்டு யார் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்ற விவரத்தைச் சேகரித்து வருகிறோம். இதனால் முக்கியப் புள்ளிகள் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்’.

வடமாநிலப் பெண் விவகாரத்தில் 15 ஆண்டுகளாகப் பாலியல் தொழில் செய்து வந்த தஞ்சாவூர்க் கும்பலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பல மாநில புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பெரிய நெட்வொர்க்காகவே செயல்பட்டதுடன், ஆசை வார்த்தைகளைக் கூறி ஏராளமான பெண்களின் வாழ்க்கையை அந்தக் கும்பல் சீரழித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜம்
ராஜம்

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்குக் கடந்த 1-ம் தேதி காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரைக் கீழே தள்ளிவிட்டு பறந்துவிட்டனர். இதைக் கவனித்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அந்தப் பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அந்த இளம்பெண்ணை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்த அதிர்ச்சித் தகவலும் வெளியானது. இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்.பி-யின் தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளரான கண்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (49), அவரது இரண்டாவது மனைவி ராஜம்(47), லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ராமச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் உள்ளிட்ட 5 பேரை, கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

`சஸ்பெண்ட் எஸ்.ஐ; குண்டர் சட்டம்!’- வடமாநிலப் பெண் விவகாரத்தில் ரகசியம் காக்கும் தஞ்சை போலீஸ்

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு 5 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து 4 சொகுசு கார்கள், 3 இரு சக்கர வாகனம், 4 செல்போன், ஒரு டைரி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சையின் முக்கியப் பகுதிகளில் ஆடம்பரமாக உள்ள 7-க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ பிரபாகரன்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ பிரபாகரன்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``செந்தில்குமார், ராஜத்திற்கு மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள புரோக்கர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் மூலமாக 20 வயதிற்குட்பட்ட இளம்பெண்களை ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர். தன்னிடம் வரும் கஸ்டமர்களின் விவரத்தை யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காப்பது இவர்களின் வழக்கம்.

அதனால், பெரும் நம்பிக்கை கொண்டதால் முக்கிய வி.ஐ.பி-க்கள், பெரும்புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் இவர்களின் கஸ்டமர்களாக இருந்துள்ளனர். வட மாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்ததுமே விதவிதமாக போட்டோ சூட் நடத்தி, அந்த போட்டோக்களை தனது பெரும் கஸ்டமர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்

ராஜத்திடமிருந்து சிக்கிய டைரியில் அவரிடம் கஸ்டமர்களாக இருந்த முக்கிய பிரமுகர்களின் செல் நம்பர்கள் உள்ளன. அத்துடன் வீட்டுக்கு வரும்போது பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் யார் யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். வீட்டுக்கு வர அச்சப்படுபவர்களுக்காக இரண்டு சொகுசுக் கார்களில் படுக்கை வசதி கொண்ட வகையில் மாற்றியமைத்து மொபைல் பாலியல் தொழிலும் நடத்தியுள்ளார்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4 செல்பொன்களைக் கொண்டு யார் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்றும் அழைத்துவரப்பட்ட வட மாநிலப் பெண்கள் குறித்த விவரத்தையும் திரட்டி வருகிறோம். இதனால் இவர்களின் கஸ்டமர்களாக இருந்த அரசியல் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் எனப் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட செந்தில்குமார் ராஜம் உள்ளிட்டவர்கள்
கைது செய்யப்பட்ட செந்தில்குமார் ராஜம் உள்ளிட்டவர்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ பிராபாகரன், போலீஸாரால் இந்தத் தொழிலுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் கவனித்து வந்துள்ளார். மேலும், ஓய்வுபெற்ற போலீஸார் பலர் இவர்களால் பணியிலிருக்கும் போது பயனடைந்தவர்கள் என்பதால் அவர்களும் இதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வந்துள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் மாமூல் அனுப்பி வைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதையும் மீறி யாரும் நெருங்கிவிட்டால் அவர்களுக்குப் பணத்தையும் இளம்பெண்களையும் காட்டி அமுக்கி விடுவார்கள்.

ஏதோ சின்ன அளவில் செய்துகொண்டிருப்பார்கள் என இவர்களுடன் தொடர்பிலிருந்த போலீஸார் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது வெளிவரும் தகவல்களைப் பார்த்து அவர்களே வாயடைத்துப் போயுள்ளனர். செந்தில்குமார், ராஜம் இருவருமே தீவிர தெய்வ பக்தி கொண்டவர்கள். தனது நெற்றியில் வரிசையாக மூன்று பொட்டுகளை வைத்துக்கொண்டு எப்போதும் பக்தியுடன் காட்சியளிப்பார் ராஜம். பெரிய இடத்துப் பெண்ணைப் போன்ற தோரணையுடன் இருப்பதால் இவர்களைப் பார்த்து யாருக்கும் எந்த சந்தேகமும் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

சீல் வைக்கப்பட்ட வீடு
சீல் வைக்கப்பட்ட வீடு

சுமார் 7 வருடங்களுக்கு முன் செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர். அப்போதே தீவிரமாக விசாரணை நடத்தியிருந்தால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார்கள். தொழில் நன்றாக நடக்கவும், அதற்கு பிராயச்சித்தமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ஒவ்வொரு வாரமும் 200 பேருக்கு அன்னதானம் செய்து வந்துள்ளனர்.

வரவழைக்கப்படும் பெண்கள் ஒருவேளை இதற்கு உடன்படவில்லை என்றால் தன்னுடைய வசீகரப் பேச்சால் அந்தப் பெண்களிடம் பத்து நாளில் 1 லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம், உனக்குப் பிடிச்ச நகையோ, ஆடம்பர செல்போனோ வாங்கிக் கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களை வலையில் விழவைத்து விடுவார். இப்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார். இதன் மூலம் ஆடம்பர பங்களா என சொகுசு வாழ்கை வாழ்ந்துள்ளனர்.

ராஜம்
ராஜம்

பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திய வீடுகளில் உள்ள சி.சி.டி.வி-யில் பதிவான காட்சிகள், சிக்கிய செல்போன்கள், டைரி அதில் குறிப்பிடப்பட்டுள்ள நம்பர்கள் என இவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பிருக்கிறது என்ற விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். பெரிய நெட்வொர்க்குடன் செயல்பட்டுள்ள இந்தக் கும்பலில் உள்ள அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு