Published:Updated:

லாரியில் பேட்டரி, டீசல் திருடிய திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ! - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

பேட்டரி திருடும் சி.சி.டி.வி காட்சி
பேட்டரி திருடும் சி.சி.டி.வி காட்சி

புல்லட்டில் வந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் டார்ச் லைட் அடித்து அருகில் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்கிறார். அவருடன் காரில் வந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் முருகன் லாரி பேட்டரியை கழற்றி காரில் கொண்டுவந்து வைக்கிறார்.

``திருடர்கள், கொள்ளையர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சிசிடிவி கேமராக்கள் அவசியம். குற்றங்களைக் குறைக்க பொதுமக்கள் தங்களின் கடைகள், வீடுகள், அலுவலகங்கள் என முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும். மூன்றாம் கண்ணாக சிசிடிவி கேமராக்கள் இயங்கும்” என தமிழக காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வைக்கும் சிசிடிவி-யில் காவல்துறையினரும் அவ்வப்போது சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் லேட்டஸ்டாக திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மணல்திருட்டு வழக்கில் போலீஸ் நண்பர்கள் குழு வாலிபருடன் சேர்ந்து மணல் லாரியில் பேட்டரி மற்றும் டீசல் திருடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கார்த்திகேயன் உதவி ஆய்வாளர்
கார்த்திகேயன் உதவி ஆய்வாளர்

கடந்த 3-ம் தேதி பாலாற்றில் மணல் திருடியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதில் லாரியை மட்டும் அங்கு நிறுத்தாமல் கிரிவலப்பாதையில் கொண்டு சென்று நிறுத்திவிட்டனர். மறுநாள் இரவு நேரத்தில் புல்லட்டில் ஒருவரும், காரில் ஒருவரும் வந்து இறங்குவதும், பிறகு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் லாரியில் உள்ள பேட்டரியையும், டீசலையும் திருடி காரில் ஏற்றுவதும் பதிவாகியுள்ளது.

வீடியோவில் பதிவாகி இருப்பவர்கள் திருக்கழுக்குன்றம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்த முருகன் ஆகியோர் எனத் தெரியவந்தது. புல்லட்டில் வந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் டார்ச் லைட் அடித்து அருகில் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்கிறார். அவருடன் காரில் வந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் முருகன் லாரி பேட்டரியை கழற்றி காரில் கொண்டுவந்து வைக்கிறார்.

டீசல் திருட்டு
டீசல் திருட்டு

அதைத் தொடர்ந்து காரில் கொண்டுவந்த காலி கேனை எடுத்து பின்பு அந்த கேனை காரில் வைக்கிறார். பின்பு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவர்கள் அங்கிருந்து புறப்படுகிறார்கள். வீடியோ வைரலாகி பரபரப்பானதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் வீடியோவில் தொடர்புள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு