Published:Updated:

சென்னை: `கருக்கலைப்பு; ஃபேஸ்புக்கில் போட்டோ!’ - காதல் கணவர் கொடுமையால் விபரீத முடிவெடுத்த மனைவி

Representational Image
Representational Image

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டதும், மனைவியின் நிர்வாண போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் கணவர்.

சென்னை, மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (40). இவர் அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ``சென்னை அயனாவரத்தில் என் அக்காள் மகள் பவானி (27) குடியிருந்துவருகிறார். அவரின் கணவர் விஜய்பாரதி. இவர்கள் இருவரும் 2015-ம் ஆண்டு முதல் காதலித்துவந்தனர். பின்னர் வடபழனி முருகன் கோயில் வளாகத்தில் இருவருக்கும் 30.1.2020-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணை அதிகமாகக் கேட்டு விஜய்பாரதியும், பவானியின் சின்ன மாமியார் அமரஜோதியும் வற்புறுத்திவந்தார்கள். அதன்படி, என் அக்காவின் வீட்டிலிருந்து 20 சவரன் நகை, கட்டில், பீரோ, ஃபிரிட்ஜ், டி.வி மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் கொடுத்து, மேலும் மாப்பிள்ளைக்கு மூன்று சவரன் நகை மற்றும் பல்சர் பைக் வாங்கிக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

Representational Image
Representational Image

திருமணம் நடந்தவுடன், அயனாவரத்தில் இருவரையும் குடியமர்த்தினோம். திருமணத்துக்கு முன்னரே இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அதனால், என் அக்காள் மகள் கருவுற்றார். கருவைக் கலைக்கும்படி விஜய்பாரதி கூறியுள்ளார். அதற்கு பவானி மறுத்துள்ளார். உடனே, விஜய்பாரதி, அவர்களின் படுக்கையறை வீடியோக்கள் மற்றும் என் அக்காள் மகளின் நிர்வாணப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி, அந்தக் கருவைக் கலைக்க வைத்திருக்கிறார். அதன் பிறகுதான் இரு வீட்டாரும் பேசி திருமணத்தையும் நடத்திவைத்தோம்.

திருமணத்துக்குப் பிறகு விஜய்பாரதியும் அவரின் சித்தி அமரஜோதியும் சேர்ந்து 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு என் அக்காள் மகளைக் (பவானியை) கொடுமை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அவருக்கு பிளாட் ஒன்றை வாங்கித் தருமாறு தொல்லை செய்திருக்கிறார்கள். என் அக்காள் மகளுக்கு முன்னதாக 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் மூலம் மகன் உள்ளார். அது தெரிந்துதான் விஜய்பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் 2-வது திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் திருமணம் நடந்த பிறகு, அந்த மகனை என் அக்காள் மகளிடமிருந்து பிரித்துவிடுவதாக மிரட்டி, பலமுறை துன்புறுத்தியிருக்கிறார் விஜய்பாரதி.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் என் அக்காள் மகள் பவானி மறுபடியும் கருவுற்றார். அந்தக் கருவைக் கலைக்கச் சொல்லியிருக்கிறார் விஜய்பாரதி. ஆனால், அதற்கு பவானி மறுக்கவே, விஜய்பாரதி அவரை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் பிரச்னை முற்றிப்போகவே, இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். புகாரின் அடிப்படையில் விஜய்பாரதியை இன்ஸ்பெக்டர் அழைத்துப் பேசினார். அதற்கு அவர் விழுப்புரத்தில் இருப்பதாகவும், உடனே காவல் நிலையம் வந்துவிடுகிறேன் என்று கூறினார். அதன்பிறகு என் அக்காள் மகளின் அலைபேசிக்கு அழைத்து விஜய்பாரதி, `காவல் நிலையம் செல்கிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்...’ என்று பேசிவிட்டு போனை வைத்துவிட்டார்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

அதன் பிறகு 7-ம் தேதி ஃபேஸ்புக்கில் என் அக்காள் மகளின் நிர்வாணப் புகைப்படத்தைப் பதிவிட்டார். அதனால் மனமுடைந்த என் அக்காள் மகள் 8-ம் தேதி மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பவானி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதால் நான் புகார் கொடுக்கிறேன். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு இரு முறை விஜய்பாரதி, என் அக்காள் மகளின் நிர்வாணப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருக்கிறார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

எனவே, என் அக்காள் மகளின் வாழ்க்கையைக் கெடுத்து, கர்ப்பமான பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, வரதட்சணை கேட்டுக் கருவைக் கலைக்கச் சொல்லி மிரட்டிய விஜய்பாரதி மற்றும் அமரஜோதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என் அக்காள் மகளின் நிர்வாணப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஜய்பாரதியைக் கைது செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஐபிசி 323, 312, 498 (A). 506(1) IT act 67 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்.

இது குறித்து அயனாவரம் போலீஸார் கூறுகையில், ``வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவரின் மகள் பவானி. பவானியும் சார்லஸ் என்பவரும் 2010-ல் காதலித்து திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தபோது திருவொற்றியூரைச் சேர்ந்த விஜய்பாரதியும் பவானியும் 2015-ம் ஆண்டு முதல் காதலித்துள்ளனர்.

Representational Image
Representational Image
சென்னை: `முறிந்த காதல்; வில்லங்க ஃபேஸ்புக் பதிவுகள்!’ - இன்ஜினீயரால் பாதிக்கப்பட்ட 100 பெண்கள்

அப்போது, பவானியும் விஜய்பாரதியும் நெருங்கிப் பழகியுள்ளனர். அதனால், பவானி கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தைக் கலைத்த பிறகு பவானிக்கும் விஜய்பாரதிக்கும் திருமணம் நடந்துள்ளது. பவானியின் தாய்மாமன் ஸ்ரீதரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளோம். பவானியிடமும் விஜய்பாரதியிடமும் விசாரணை நடத்திய பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பவானியின் நிர்வாணப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கிலிருந்து அகற்றவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

மனைவியைப் பழிவாங்க, அவரின் நிர்வாணப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் கணவர் பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு