Published:Updated:

திருநெல்வேலி: சிமெண்ட் ஆலையில் சிக்கிய பைப் வெடிகுண்டுகள்! - செயல் இழக்க வைத்த போலீஸார்

செயல் இழக்க வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டுகள்
செயல் இழக்க வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டுகள்

திருநெல்வேலியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பைப் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்து அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை போலீஸார் செயல் இழக்க வைத்தனர்.

நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையின் செக்யூரிட்டிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், ‘தொழிற்சாலையின் உள்ளே வெடிகுண்டு வைத்திருக்கிறோம். சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டுகள்

அதனால் பதற்றம் அடைந்த செக்யூரிட்டி, தொழிற்சாலை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன் உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சிமெண்ட் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அறையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள், தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டு பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

வெடிகுண்டுகளை பார்வையிடும் எஸ்.பி மணிவண்ணன்
வெடிகுண்டுகளை பார்வையிடும் எஸ்.பி மணிவண்ணன்

அந்த பைப் வெடிகுண்டுகள் இன்று வெடிகுண்டு நிபுணர்களால், ஆள் இல்லாத இடத்தில் வைத்து செயல் இழக்க வைக்கப்பட்டன. அப்போது வெடிகுண்டுகளில் இருந்து பெரும் சத்தமும் புகையும் எழுந்தது. வெடிகுண்டுகளை ஆலையின் உள்ளே பதுக்கிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

ஆலையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டது தொடர்பாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையின்போது, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. சிமெண்ட் தொழிற்சாலை ஊழியர்கள் மூலமாகவே பைப் வெடிகுண்டுகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

வெடிகுண்டுகள் செயல் இழக்க வைப்பு
வெடிகுண்டுகள் செயல் இழக்க வைப்பு

சிமெண்ட் ஆலை நிர்வாகத்திடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு ஒரு மர்ம கும்பல் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆலை நிர்வாகத்தினர் பணம் தர மறுத்ததால் குறைவான பணம் கேட்ட அந்த கும்பல், கடைசியாக 50,000 ரூபாயாவது கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் ஆலை நிர்வாகம் கொடுக்க மறுத்து விட்டதால் பைப் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பலுக்குத் தொடர்பு இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு