Published:Updated:

வட இந்திய துப்பாக்கிக் கொள்ளையன் காஞ்சிபுரத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி என்ன?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணிடம் துப்பாக்கிமுனையில் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா. இவர், பென்னலூர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் இருவர், இந்திரா அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க செயினைப் பறித்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். இந்திராவின் அலறல் சத்தம் கேட்டு கொள்ளையர்களைப் பிடிக்க பொதுமக்கள் முயன்றனர். அப்போது செயின் பறிப்பு கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். அதைப் பார்த்து பயந்த பொதுமக்கள் அமைதியாகினர். இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர்.

எஸ்.பி சுதாகர்
எஸ்.பி சுதாகர்

இது குறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி டாக்டர் சுதாகர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார். பின்னர் செயின் பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் பதுங்கியிருந்த இடத்தைச் சுற்றிவளைத்த போலீஸார், ட்ரோன் மூலம் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். இந்த நிலையில், கொள்ளையர்களின் கையில் துப்பாக்கி இருந்ததால் தனிப்படை போலீஸாரும் முன்னெச்சரிக்கையாகவே செயல்பட்டனர். இந்தச் சமயத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது காவலர் ஒருவரை கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றார். அதனால் தனிப்படை போலீஸார் துப்பாக்கிமுனையில் கொள்ளையர்களைச் சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் கொள்ளையர்கள் தொடர்ந்து போலீஸாரைத் தாக்கத் தொடங்கியதால் தற்காப்புக்காக தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொள்ளையர்களில் ஒருவர் கீழே விழுந்தார். மற்ற இருவர் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

துப்பாக்கிக்குண்டு பாய்ந்த கொள்ளையனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. போலீஸாரின் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்தவரின் பெயர் முர்தஸா. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிடிப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து துப்பாக்கி, வழிப்பறி செய்த தங்க செயின் ஆகியவற்றை மீட்ட போலீஸார் அவர்களை விசாரித்துவருகின்றனர்

என்கவுன்ட்டரில் பலியான கொள்ளையன்
என்கவுன்ட்டரில் பலியான கொள்ளையன்
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: `என்கவுன்டர் முதல் கோயில் தேரோட்டம் நடத்தியது வரை..!’ - கோவை அதிரடிகள்
டி.ஜி.பி சைலேந்திரபாபு
டி.ஜி.பி சைலேந்திரபாபு

கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றிவரும் துளசிதாஸ், ராம் ஆகியோர் கடையைப் பூட்டிவிட்டு பைக்கில் புறப்பட்டனர். அப்போது ராமுவையும் துளசிதாஸையும் மர்ம நபர்கள் தாக்கினர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமுவை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரின் நுரையீரல் பகுதியில் துப்பாக்கி தோட்டா இருந்தது. அதனால் அவரையும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு வழிப்பறியில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்திராவிடம் செயின் பறித்த கும்பலுக்கும், ராமுவின் நுரையீரலிலுள்ள துப்பாக்கி தோட்டாவுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகத்தில் `டிஸ் ஆர்ம்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டு ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு