Published:Updated:

கொடநாடு வழக்கு: கொள்ளையர்களிடம் வாகன சோதனை; நைட் டூட்டி பார்த்த போலீஸாரிடம் ரகசிய விசாரணை!

கொடநாடு
கொடநாடு

கொள்ளையர்களின் வாகனத்தைச் சோதனை செய்து விடுவித்த பின்னணி குறித்து அன்றைய தினம் இரவு கூடலூர் டவுன் பகுதியில் ரோந்துப் பணியிலிருந்த போலீஸாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு தொடர்ந்து பல பரபரப்பு திருப்பங்களைக் கண்டு, மூன்று ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் களத்தின் பேசுபொருளாக இருந்துவரும் இந்த வழக்கில், தற்போது கூடுதல் விசாரணை நடைபெற்றுவருகிறது.

கொடநாடு வழக்கு: `என்கிட்ட வாங்கின 4 செல்போன் எங்கே?!’ - நீதிமன்றத்தில் போலீஸாரிடம் சயான் வாக்குவாதம்
கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சயானிடம் கூடுதல் விசாரணையின் அடிப்படையில் கடந்த 17-ம் தேதி மூன்று மணி நேரம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். தற்போது காவல்துறையினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருவது பரபரப்பை மேலும் அதிகரிக்கச்செய்திருக்கிறது.

ஊட்டியில் இரவு நேரத்தில் காவல்துறையினரிடம் நடத்தப்பட்டுவரும் ரகசிய விசாரணை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர், ``கொலை, கொள்ளை நடந்த தினத்தன்று இரவு கொடநாடு எஸ்டேட், கெரடாமட்டம், கோத்தகிரி, கூடலூர், நாடுகாணி ஆகிய பகுதிகளில் நைட் டூட்டி பார்த்த போலீஸாரிடம், எஸ்.பி ஆசிஷ் ராவத் முன்னிலையில் விசாரணை நடந்தது.

கொடநாடு வழக்கு விசாரணை
கொடநாடு வழக்கு விசாரணை

கொடநாடு சம்பவத்தன்று, கூடலூர் வழியாக வாகனத்தில் கேரளாவுக்குத் தப்பிச் சென்ற கொள்ளையர்களின் வாகனம் சோதனை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து, அன்றைய தினம் இரவு கூடலூர் டவுன் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தெரிவித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணையும் பல மணி நேரம் நீடித்தது. சயான், கனகராஜின் சகோதரர் தனபால் , போலீஸாரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அறிக்கையாக விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். கூடுதல் விசாரணையை மேலும் சிலரிடம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்"என்றார்.

கூடுதல் விசாரணையின் அடிப்படையில் பெறப்பட்டுவரும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னரே பரபரப்பைக் கிளப்பிவரும் நிலையில், வாக்குமூலங்கள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டால் இந்த வழக்கின் போக்கே முழுமையாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு