Published:Updated:

`இரும்புவாளியால் மாணவனைத் தாக்கிய டியூஷன் டீச்சர்!' - போலீஸ் புகாரால் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவு

என் வீட்டுக்கு வரும்வரை ரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது. முதலுதவிகூட செய்யவில்லை. மகனின் நிலையைப் பார்த்து பொறுக்க முடியாமல்தான் ஆதாரத்துக்காகப் புகைப்படம் எடுத்து வைத்தேன்.

பாரிஸ் முகம்மது
பாரிஸ் முகம்மது

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளைப் பகுதியைச் சேர்ந்தவர், மாஹின் அபுபக்கர். பெயின்டிங் வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இரண்டாவது மகன் பாரிஸ் முகம்மது 6-ம் வகுப்பும் படித்துவருகின்றனர். இருவரும் பள்ளிவிளைப் பகுதியில் உள்ள சரண்யா என்பவர் வீட்டில் டியூஷனுக்கு செல்வது வழக்கம்.

பாரிஸ் முகம்மது
பாரிஸ் முகம்மது

நேற்று, டியூஷனுக்கு சென்ற பாரிஸ் முகம்மதுவை அவன் அண்ணன், தலையில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார்.

இதைக் கண்ட பெற்றோர், பதறியபடி விசாரித்துள்ளனர். ஒரு மாணவியின் நோட்டை எடுத்ததாகக் கூறி டியூஷன் ஆசிரியை சரண்யா, இரும்புவாளியால் தாக்கியதில், பாரிஸ் முகமதுவின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். பெற்றோர், முகமதுவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இதுகுறித்து மாஹின் அபுபக்கர் கொடுத்த புகாரின்பேரில், சரண்யா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாரிஸ் முகம்மது
பாரிஸ் முகம்மது

இதுகுறித்து மாஹின் அபுபக்கர் கூறுகையில், ``எனது வீட்டிலி ருந்து சரண்யா வீடு, சுமார் 300 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. வேறு மாணவியின் நோட்டை காணவில்லை என்று என் மகனை இரும்புவாளியால் அடித்துள்ளார். இரண்டாவது அடி அடிக்க வாளியை ஓங்கியபோது, எனது மகன் எழுந்துவிட்டான்.

அப்போது ரத்தம் வந்ததால், முகத்தைக் கழுவியிருக்கிறான். ரத்தம் பீறிட்டு வந்ததால் அவனது அண்ணனுடன் வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அங்கிருந்து என் வீட்டுக்கு வரும்வரை ரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது.

பாரிஸ் முகம்மது
பாரிஸ் முகம்மது

முதலுதவிகூட அவர் செய்யவில்லை. மகனின் நிலையைப் பார்த்து பொறுக்க முடியாமல்தான் ஆதாரத்துக்காக புகைப்படம் எடுத்துவைத்தேன். இப்போது, ஆசிரியை வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்” என்றார்.