Published:Updated:

`டாக்டர் பட்டமே பெறாத திருத்தணிகாசலம்; ஆய்வில் மருந்துகள்!' - வெண்புள்ளி சிகிச்சையால் புதிய வழக்கு

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிய திருத்தணிக்காசலத்தை சென்னை போலீஸார் கைது செய்தனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீது புதியதாக 2 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் ரத்னா சித்த மருத்துவமனை நடத்திவந்த திருத்தணிக்காசலம், யூடியூபில் 90-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்தார். அந்த வீடியோக்களில் கொரோனா வைரஸிக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். மேலும், அரசுக்கு சவால்விடுக்கும் வகையில் அவர் பேசியிருந்தார். திருத்தணிக்காசலத்தின் வீடியோ வைரலானது. அதோடு கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்
`சந்தேகம் இருந்தால் மருந்தை சாப்பிட்டுப் பாருங்கள்' -சவால்விட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

இதையடுத்து திருத்தணிக்காசலம் சித்த மருத்துவரே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதுதொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் தகவலைப் பெற்ற சிலர், அதை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் கணேசனுக்கு ஆதாரங்களுடன் புகாரளித்தனர். அதன்பேரில் இயக்குநர் கணேசன், சென்னை மத்திய குற்றப்பிரிவில் திருத்தணிக்காசலம் மீது புகாரளித்தார். அதன்பேரில், துணை கமிஷனர் நாகஜோதி ஆலோசனை பேரில், கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்பார்வையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. விசாரணையில் தேனியில் பதுங்கியிருந்த திருத்தணிக்காசலத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து திருத்தணிக்காசலத்தை 6 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது திருத்தணிக்காசலம் தரப்பு, நீதிமன்றத்தில் முறையிட்டது. அதனால், போலீஸ் காவல் 2 நாள்கள் குறைக்கப்பட்டது. போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருத்தணிக்காசலத்துக்கு நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதி வரை காவலை நீட்டித்தது.

`மக்களை ஏமாற்றும் வீடியோ; 5 பிரிவுகளில் வழக்கு!’-யார் இந்தப் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்?
திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

இதுதொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``திருத்தணிக்காசலம், சித்த மருத்துவர் இல்லை என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், அவரின் மனைவி, சித்த மருத்துவர். அதனால் திருத்தணிக்காசலத்தைக் கைது செய்வதில் சில இடையூறுகள் இருந்தன. அதையும் மீறிதான் திருத்தணிக்காசலத்தைக் கைது செய்தோம். போலீஸ் காவலின்போது, திருத்தணிக்காசலத்தை வழக்கு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு அவர் அளித்த பதில்களை வீடியோவாகப் பதிவு செய்தோம். மருத்துவம் தொடர்பான திருத்தணிக்காசலம் கூறிய தகவல்களை மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். திருத்தணிக்காசலத்திடம் சிகிச்சை முறை குறித்து கேட்டதற்கு, அவர், பல மூலிகைகளின் பெயர்களை அவர் கூறினார். இதற்கிடையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகத் திருத்தணிக்காசலம் கூறியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு அவர், சித்த மருத்துவத்தில் கொரோனா வைரஸுக்கு மருந்துகள் இருப்பதாக மட்டுமே கூறினேன் என்று தெரிவித்தார்.

திருத்தணிக்காசலம்
திருத்தணிக்காசலம்

திருத்தணிக்காசலம் அளித்த தகவலின்படி அவரின் குடோனிலிருந்து சில மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளோம். இவரிடம் சிகிச்சை பெற்ற வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு பார்சல் மூலம் மருந்து, மாத்திரைகளை அனுப்பிய தகவலும் கிடைத்துள்ளது. அதனால், பறிமுதல் செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளோம். அதன்முடிவு வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையில் திருத்தணிக்காசலத்திடம் கொடுத்த மருந்து, மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் தங்களை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் 2 பேர் புகாரளித்துள்ளனர். மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ், பக்கவாதத்துக்காக திருத்தணிக்காசலத்திடம் சிகிச்சை பெற்றுள்ளார். போடிநாயக்கனூரைச் சேர்ந்த குருநாதன், வெண்புள்ளிக்காக சிகிச்சை பெற்றுள்ளார். இருவரையும் திருத்தணிக்காசலம் சிகிச்சை என்ற பெயரில் ஏமாற்றி பணத்தைப் பறித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதனால் புதியதாக 2 வழக்குகள் திருத்தணிக்காசலம் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

திருத்தணிக்காசலத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவை தொடர்புகொண்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் புகாரின்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணிக்காசலத்துக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பைத் திருத்தணிக்காசலம் கொடுத்தார்" என்றனர்.

திருத்தணிக்காசலம், சித்த மருத்துவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள், மருந்துகளின் பரிசோதனை முடிவுகளுக்காக போலீஸார் காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு