Published:Updated:

`நம்ப வைப்பார்கள்; கைவரிசை காட்டுவார்கள்!' -சென்னையைப் பதறவைக்கும் `ஆட்டோ ராணிகள்'

சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து ஆட்டோவில் வரும் 3 பெண்கள் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆட்டோ
ஆட்டோ

சென்னையில் நகைகளை அணிந்தபடி மூதாட்டிகள் பஸ்ஸுக்காக காத்திருப்பதைப் பார்த்தால் ஆட்டோவில் வரும் அந்த மூன்று பெண்கள் உடனடியாக இறங்கிவிடுவார்கள். பிறகு அந்த மூதாட்டியிடம் அன்பாக ஒரு பெண் பேசுவாள். `நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' என்பதுதான் அந்தப் பெண்ணின் முதல் கேள்வியாக இருக்கும்.

அதற்கு மூதாட்டி அளிக்கும் பதில் அடிப்படையில், `நாங்களும் அங்குதான் செல்கிறோம். வயதான காலத்தில் நீங்கள் பஸ் ஏறி சிரமப்பட்டுச் செல்வதைவிட எங்களுடன் ஆட்டோவில் வந்துவிடுங்கள்' என்று பாசமாகச் சொல்வாள்.

ஏமாற்றுதல்
ஏமாற்றுதல்

அந்தப் பெண்ணின் பேச்சை நம்பி ஏறும் மூதாட்டியை தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். ஆட்டோவில் செல்லும்போது மூதாட்டியிடம் நலம் விசாரிப்பார்கள், குடும்பக் கதை பேசுவார்கள். இந்தச் சமயத்தில் மூதாட்டியின் அருகில் அமர்ந்திருக்கும் பெண் செயினை அறுத்துவிடுவார். சிறிது நேரத்துக்குப்பிறகு மூதாட்டியிடம், `ஆயா நீங்கள் அணிந்திருக்கும் தங்கச் செயின் அறுந்துகிடக்கிறது, கீழே விழுந்துவிடாமலிருக்க அதைப் பையில் வைத்துக்கொள்ளுங்கள்' என்று இன்னொரு பெண் கூறுவாள். அப்போது மூதாட்டி கழுத்தை தடவிப்பார்க்கும்போது உண்மையிலேயே செயின் அறுபட்டிருக்கும்.

உடனே மூதாட்டி, `நல்லவேளை, நீ சொன்னே, இல்லையென்றால் கீழே விழுந்திருக்கும்' என்றபடி கழுத்தில் கிடந்த செயினை கழற்றும்வரை 3 பெண்களும் அமைதியாக இருப்பார்கள். செயினை கழற்றியபிறகு அதை பேப்பரில் மடித்து மூதாட்டியிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பெண் சொல்வாள். மூதாட்டியும் மூன்று பெண்களின் பேச்சை முழுமையாக நம்பியபடி பையில் அந்தச் செயினை வைத்துவிடுவார்.

`தற்கொலை போன்ற செட்-அப்!’ - கரூரில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை?

இதையடுத்துதான் மூன்று பெண்கள் தங்களின் சுயரூபத்தைக் காட்டத் தொடங்குவார்கள். செயின் வைத்த பையை பிளேடால் அறுக்கும் ஒரு பெண், அதில் உள்ள செயினை மூதாட்டிக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வார். அப்போது மற்ற இரண்டு பெண்கள், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பேச்சு கொடுத்துக்கொண்டிருப்பார்கள். செயின் கைக்கு வந்ததும் சிக்னல் கொடுப்பார் அந்தப் பெண்.

பின்னர், மூதாட்டி கூறிய இடத்தில் அவரை இறக்கிவிட்டு ஆட்டோவிலேயே அவர்கள் மூன்று பேரும் சென்றுவிடுவார்கள். இப்படித்தான் ஆட்டோ ராணிகள் சென்னையில் மூதாட்டிகளைக் குறிவைத்து கொள்ளையடித்துவருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் மூன்று மூதாட்டிகளிடம் ஆட்டோ ராணிகள் கைவரிசை காட்டியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Vikatan

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி (70). இவரின் மகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் பார்ப்பதற்காக நேற்று காலை ரங்கநாயகி, செனாய் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் அருகில் ஆட்டோ ஒன்று நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவர், ஆயா எங்கே போக வேண்டும் என்று அன்பாகக் கேட்டுள்ளார். உடனே ரங்கநாயகியும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை என்று சொல்ல, நாங்களும் அவ்வழியாகத்தான் செல்கிறோம். 5 ரூபாய் கொடுங்கள் இறக்கி விட்டுவிடுகிறோம் என்று சொல்லியுள்ளார்.

அதை நம்பிய ரங்கநாயகியும் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதன்பிறகு ரங்கநாயகி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்கச் செயினைத் தங்களின் ஸ்டைலில் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் ரங்கநாயகியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டு ஆட்டோ ராணிகள் சென்றுவிட்டனர். அதன்பிறகுதான் ரங்கநாயகி, செயின் பறிபோனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

`கையில் கண்ணாடித் துண்டு; எரிக்கப்பட்ட பெண் உடல்!' - பிரியங்கா மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கொடூரம்

ரங்கநாயகியைப் போல கடந்த வாரத்தில் மேலும் 2 மூதாட்டிகளிடம் ஆட்டோ ராணிகள் கொள்ளையடித்துள்ளனர். நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தாட்சாயினி என்ற மூதாட்டியிடம் 5 சவரன் செயினையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டியிடம் 2 சவரன் செயினையும் இந்த ஆட்டோ ராணிகள் தங்களின் ஸ்டைலில் பறித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை நடந்துவருகின்றன.

ஆட்டோ ராணிகள் வரும் ஆட்டோவை ஆண் ஒருவர் ஓட்டுகிறார். அவரும் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், ஆட்டோவில் வரும் மூன்று பெண்களில் 2 பேர் சேலை அணிந்திருப்பார்கள், இன்னொருவர் சுடிதார் அணிந்திருப்பார். எனவே, வீட்டை விட்டு வெளியில் செல்லும் மூதாட்டிகள், முதியவர்கள் இந்த நூதன கொள்ளைக் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டும். விரைவில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

இதற்காக கொள்ளைச் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதில் கிடைத்த ஆட்டோவின் வாகனப் பதிவு நம்பரை ஆய்வு செய்தபோது அது போலி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து தகவல்களை சேகரித்துவருகிறோம்" என்றார்.

சென்னை போலீஸாருக்கு சவால்விடும் வகையில் இந்த ஆட்டோ ராணிகள் கைவரிசை காட்டிவருகின்றனர். சென்னை அம்பத்தூர், அயனாவரம், திருவொற்றியூர் என தினமும் ஒரு இடம் என மூதாட்டிகளை டார்க்கெட் வைத்து இந்தக் கும்பல் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தக் கும்பலிடம் சிக்கி நகைகளைப் பறிக்கொடுக்கும் பெரும்பாலான மூதாட்டிகள் காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதில்லை என்பது அதிர்ச்சித் தகவல்.