Published:Updated:

மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?

புல்லட் புரூஃப் கார் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் புரூஃப் கார் பிளான்

ஆளைத் தூக்க ஸ்கெட்ச்... புல்லட் புரூஃப் கார் பிளான்... மினி கான்வாய்...

மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?

ஆளைத் தூக்க ஸ்கெட்ச்... புல்லட் புரூஃப் கார் பிளான்... மினி கான்வாய்...

Published:Updated:
புல்லட் புரூஃப் கார் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
புல்லட் புரூஃப் கார் பிளான்

ஜூன் 1-ம் தேதி இரவு 11 மணி இருக்கும்... திடீரென்று சென்னை போலீஸாரின் வாக்கிடாக்கிகள் அலறின. ‘‘ரௌடி சிடி மணியைப் பிடிக்கச் சென்ற ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ பாலகிருஷ்ணனை போரூர் மேம்பாலத்தில் மணி சுட்டுவிட்டான்’’ என்று போலீஸார், கமிஷனர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க... அடுத்த சில நிமிடங்களில் சைரன் அலற பரபரத்துக் கிளம்பின போலீஸ் வாகனங்கள். சிடி மணி ஓட்டி வந்த பி.எம்.டபுள்யூ காரை போலீஸார் சுற்றி வளைக்க... ‘என்கவுன்ட்டர்’ பயத்தில் காரைவிட்டு இறங்கிய சிடி மணி, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தான். அதில் அவனது வலது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிடி மணியையும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணனையும் மீட்ட போலீஸார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள்!

மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?

மேற்கண்ட சம்பவத்தின் பின்னணி என்ன? அன்றைய தினம் ஸ்பாட்டிலிருந்த போலீஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்... ``உளவுத்துறை கொடுத்த தகவல்படி, சிடி மணியைப் பிடிக்க ஸ்பெஷல் டீம் போலீஸார் விரைந்தார்கள். போலீஸாரைப் பார்த்ததும் சிடி மணி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான். அதில் ஒரு குண்டு எஸ்.ஐ பாலகிருஷ்ணனின் வலது கையைத் துளைத்து வெளியேறியது. அப்போதும் விடாமல் துப்பாக்கிமுனையில் அவனைச் சுற்றி வளைத்த போலீஸார், சரண்டர் அடையும்படி எச்சரித்தார்கள். ஆனால், அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்று, பாலத்திலிருந்து குதித்தான். எலும்பு முறிவால் அவனால் ஓட முடியவில்லை. நாங்கள் அவனைப் பிடித்துவிட்டோம். அவன் ஓட்டிவந்த பி.எம்.டபுள்யூ கார், துப்பாக்கி, கத்தி, இரண்டு ஐபோன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். எஸ்.ஐ-யைக் கொலை செய்ய முயன்றதாகவும், ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் அவன்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். சிகிச்சை முடிந்த பிறகு காவலில் எடுத்து சிடி மணியை விசாரிக்கவிருக்கிறோம்’’ என்றார்கள்.

சிடி விற்பனை டு ரௌடி!

சிடி மணி ரௌடியாக உருவெடுத்தது எப்படி? போலீஸ் உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டனின் அப்பா பார்த்தசாரதி பழ வியாபாரம் செய்துவந்தார். அப்போது தேனாம்பேட்டையில் புதுப்படங்களின் சிடி-க்களை மணிகண்டன் விற்றுவந்தான். அதனால் அடிக்கடி அவனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். சிறையில் அவனுக்குக் கிடைத்த நண்பர்கள் மூலம் ரௌடி சாம்ராஜ்யத்தில் கால்பதித்தான். அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து வழக்குகள் மணிகண்டன் மீது பதிவாகி, ரௌடிகள் பதிவேட்டிலும் அவனது பெயர் இடம்பிடித்தது. சிடி விற்பனை செய்ததால், `சிடி மணி’ என்றே அழைக்கப்பட்டான் மணிகண்டன்.

மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?

2006-ம் ஆண்டு வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் சிடி மணி கைது செய்யப்பட்டான். இதுதான் அவன்மீது பதிவுசெய்யப்பட்ட முதல் கொலை வழக்கு என்கிறார்கள். அடுத்து, 2012-ல் தேனாம்பேட்டை தாமஸ் ரோட்டில் நடந்த ஒரு கொலை வழக்கில் சிடி மணியின் பெயர் பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்போதும் தனக்கென்று ஒரு கூட்டத்தைப் பக்கத்தில் வைத்திருக்கும் சிடி மணி, ஸ்கெட்ச் போட்டு ஆளைத் தூக்குவதில் கில்லாடி. ஆளைத் தூக்குவதாக மிரட்டியே ரியல் எஸ்டேட், சொத்துப் பஞ்சாயத்து என கொடிகட்டிப் பறந்த சிடி மணியின் காட்டில் பண மழை பொழியத் தொடங்கியது. பைக், சாதாரண காரில் சென்றுகொண்டிருந்த சிடி மணி, சொகுசு காரில் பயணிக்கத் தொடங்கினான். ஒருபக்கம் பணம் குவிய, மறுபக்கம் எதிரிகளும் உருவாகத் தொடங்கினார்கள். வேளச்சேரி திருவேங்கடம், சைதாப்பேட்டை ஜெகநாதன் என்ற குள்ள ஜெகா ஆகியோர் சிடி மணிக்குக் குறிவைத்துக் காத்திருந்தார்கள்.

மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?
மணிகண்டன் ‘சிடி’ மணி ஆனது எப்படி?

தென்மாவட்டத்தைச் சேர்ந்த `சம்பவ’ செந்திலுக்கும், சிடி மணிக்கும் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள இடப் பிரச்னையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, ரௌடி காக்கா தோப்பு பாலாஜியுடன் கைகோத்த சிடி மணி, செந்திலுக்கு ஸ்கெட்ச் போட்டான். அதை மோப்பம் பிடித்த செந்தில் தரப்பு, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் சிடி மணியையும், காக்கா தோப்பு பாலாஜியையும் போட்டுத்தள்ள அண்ணா சாலையில் அவர்கள் சென்ற கார்மீது வெடிகுண்டுகளை வீசியது. அதில் தப்பிய சிடி மணி, அதன் பிறகு எப்போதும் பலத்த பாதுகாப்புடனேயே வலம்வரத் தொடங்கினான். ஓர் இடத்துக்கு அவன் செல்கிறான் என்றால், அவனின் காரின் முன்னாலும் பின்னாலும் ஆயுதங்களுடன் அவனின் ஆதரவாளர்கள் கார்களில் பின்தொடர்வார்கள். கிட்டத்தட்ட ஒரு மினி கான்வாய் போலத்தான் சிடி மணி சென்னைக்குள் வலம் வந்துகொண்டிருந்தான்.

இதற்கிடையே புல்லட் புரூஃப் காரைப் பயன்படுத்த சிடி மணி முடிவு செய்தான். அதற்காக டெல்லியைச் சேர்ந்த ஒரு கார் நிறுவனத்திடம் கொட்டேஷன் வாங்கியிருக்கிறான். அதேசமயம், அண்ணா சாலை சம்பவத்தில் தன்னைக் காப்பாற்றிய சொகுசு காரையே புல்லட் புரூஃப் காராக மாற்றவும் அவனிடம் ஒரு திட்டம் இருந்தது என்கிறார்கள். எப்போதும் தன்னைச் சுற்றி ஆபத்து இருந்ததால், செல்போனை மூன்று தடவை அசைத்தாலே அவசர மெசேஜ்கள் சிடி மணியின் வழக்கறிஞர், குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்குச் செல்லும்படியும் செட் செய்திருந்தான். அப்படித்தான் போரூர் மேம்பாலத்தில் போலீஸார் அவனைச் சுற்றி வளைத்தபோதும் மெசேஜ்கள் சென்றிருக்கின்றன. சிடி மணி தங்கியிருக்கும் சொகுசு பங்களாக்களைச் சுற்றி சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி அவற்றைத் தனது செல்போன் மூலம் நோட்டமிட்டு வந்திருக்கிறான். சென்னையிலுள்ள பிரபல ரௌடி ஒருவனின் கொலையில் சிடி மணிக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக அவனிடம் விசாரணை நடத்தவிருக்கிறோம்’’ என்றார்கள் விலாவாரியாக!

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

கருணாநிதி பிறந்தநாள்... உயிர் தப்பிய சிடி மணி?

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சென்னை பெருநகரத்துக்குப் புதிய கமிஷனராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டதை அடுத்து, சென்னையிலுள்ள ரௌடிகளின் தகவல்களைச் சேகரித்தவர், அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். சென்னையில் டாப் 10 ரௌடிகளில் ஒருவனான சிடி மணியின் முழு விவரங்கள் கமிஷனரின் டேபிளுக்குச் சென்றன. அவனது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்வதை அறிந்த போலீஸார், சிடி மணியைப் பிடிக்க முடிவு செய்தார்கள். அதன்படிதான் ஜூன் 1-ம் தேதி இரவு, சிடி மணியைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது போலீஸாரை நோக்கி சிடி மணி துப்பாக்கியால் சுட்டதும், அவனை என்கவுன்ட்டர் செய்ய மேலிட அனுமதிக்காக ஸ்பெஷல் டீம் போலீஸார் விடிய விடியக் காத்திருந்தார்களாம். ஆனால், அதற்கு மறுநாள் ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால் மேலிடத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை; அதனாலேயே அவன் உயிர் தப்பினான் என்கிறார்கள் போலீஸார்.

சிடி மணி தரப்பில் நம்மிடம் பேசிய வழக்கறிஞர்கள் சிலர், ‘‘கடந்த ஓராண்டாக அனைத்து வழக்கு விசாரணையிலும் சிடி மணி ஆஜராகி வந்தார். உயிர் பாதுகாப்பு கருதி புல்லட் புரூஃப் கார் ஒன்றை வாங்க சிடி மணி திட்டமிட்டது உண்மைதான். ஆனால், செலவு அதிகம் என்பதால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். சிடி மணி மீது 52 வழக்குகள் இருந்தன. அவற்றில், சில வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்டார். தற்போது 15 வழக்குகள் மட்டுமே இருக்கின்றன. தலைமறைவு குற்றவாளி என சிடி மணி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதனாலேயே, போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதைச் சட்டப்படி எதிர்கொள்வோம். எப்போதும் ஆதரவாளர்களுடன் செல்லும் சிடி மணி அன்றைய தினம் மட்டும் காரை அவரே ஓட்டியதாக போலீஸார் சொல்வதை எப்படி நம்ப முடியும்? மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரைச் சந்தித்து பேசினால்தான் என்ன நடந்தது என்று தெரியும்’’ என்றார்கள்.க

கை காலில் கட்டுகளுடன் மருத்துவமனையில் படுத்திருக்கும் சிடி மணியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிரிகள் அதிகம் என்பதால், மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்புப் பணிக்காக அவரின் ஆதரவாளர்களும் ரகசியமாக வலம்வருகிறார்கள். பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை வட்டாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism