Published:Updated:

`கைவிலங்குடன் `ஹார்ட்டின் போஸ்’; 3 நாள் போலீஸ் காவல்!’- வேகமெடுக்கும் இன்ஜினீயர் சுஜி வழக்கு

கைவிலங்குடன் ஹார்ட் சிம்பல் காட்டும் சுஜி
கைவிலங்குடன் ஹார்ட் சிம்பல் காட்டும் சுஜி

சுஜியுடன் தொடர்பில் இருந்த மற்றும் உதவிய அரசியல் பிரமுகர்கள், அவரது நண்பர்கள் குறித்த விவரங்கள் இந்த விசாரணையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலிப்பதாக நடித்து பணம் மற்றும் லேப்டாப் வாங்கியதுடன் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக சுஜி மீது சென்னைப் பெண் மருத்துவர் முதன்முதலில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் மற்றொரு பெண் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு லட்சம் ரூபாய் கந்துவட்டிக்குக் கொடுத்து ஹார்லி டேவிட்சன் பைக்கை பறிமுதல் செய்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் சுஜி மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுஜியின் மொபைல் போன், லேப்டாப், அவர் பயன்படுத்திய ஹார்லி டேவிட்சன் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு பெண்கள் சுஜி மீது புகார் அளித்துள்ளனர்.

இன்ஜினீயர் சுஜி என்கிற காசி
இன்ஜினீயர் சுஜி என்கிற காசி

பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் சிறையில் உள்ள சுஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் போலீஸார் அவரை இன்று நேரில் ஆஜர்படுத்தினர். சுஜியைப் பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் விண்ணப்பித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். சுஜியை சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கோவையில் கல்லூரியில் படித்த சில மாணவிகளை அவர் ஏமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளதால் கோவைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் வாய்ப்புள்ளது. இதனால் சுஜியுடன் தொடர்பில் இருந்த, உதவிய அரசியல் பிரமுகர்கள், அவரது நண்பர்கள் குறித்த விவரங்கள் இந்த விசாரணையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனால் சுஜிக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட காசி என்ற சுஜி
கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட காசி என்ற சுஜி

இதற்கிடையே நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சுஜியை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது அவர்களைப் பார்த்து தனது இரு கைகளால் ஹார்ட் சிம்பல் காண்பித்தார். கையில் விலங்குடன், காவலர்கள் புடைசூழ இருந்தபோதே சுஜி இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு