Published:Updated:

`தனி வீடுகள்தான் டார்கெட்!’ - போலி மதபோதகர், சாமியார் உட்பட 8 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

பிடிபட்ட எட்டுப் பேர் கும்பல்
பிடிபட்ட எட்டுப் பேர் கும்பல்

திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒதுக்குபுறமாக உள்ள வசதியான வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துவந்த போலி கிறிஸ்தவ மதபோதகர், கோயில் பூசாரி உட்பட எட்டுப் பேர்கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகள், கோயில்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறிவந்தன. இதனால், இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி முன்னிலையில் மயிலம் மற்றும் ஒலக்கூர் காவல் நிலைய காவலர்கள் சிலரை இணைத்து, தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 20-ம் தேதி நள்ளிரவு, மயிலம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே போலீஸார் சோதனை செய்துகொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த கறுப்பு நிற ஹோண்டா சிட்டி காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

திடீரென வேகமெடுத்த அந்த கார் காவலர்களை மோதுவதுபோல வந்து சிட்டாகப் பறந்திருக்கிறது. உடனே தங்களது வாகனத்தை எடுத்துச் சென்று அந்த வாகனத்தை துரத்திப்பிடித்த காவலர்கள், காரில் இருந்த எட்டு நபர்களிடமும் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பதிலைத் தெரிவித்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி அப்போது திடுக்கிடும் பல உண்மைகளும் தெரியவந்துள்ளன.

இந்த எட்டுப் பேரில், நான்கு பேர் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இருவர் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அறியப்பட்ட நிலையில், இவர்களை இங்கு திருட்டுச் சம்பவத்தை அறங்கேற்றுவதற்கு அழைத்து வந்தது மயிலம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த போலி கோயில் பூசாரியும், போலி கிறிஸ்தவ மத போதகரும் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 26 பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய பயங்கர ஆயுதங்கள், ஒரு கார் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளனர் காவல்துறையினர்.

ஜெராக்ஸ் போடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள்; ஆடுகள் நூதன திருட்டு! - மூவர் கும்பல் சிக்கியது எப்படி?

இது தொடர்பாக, மயிலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் சண்முகத்திடம் பேசினோம். ``மயிலம் பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி சக்திவேல், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஏழுமலை இருவரும் இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக உள்ள வீடுகளுக்குச் சென்று, பூஜை செய்வது, போதனை செய்வது போன்ற ஆன்மிகரீதியான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, வசதியாக இருப்பவர்களின் வீடுகளையும் நோட்டமிட்டுப் பார்த்துவந்துள்ளனர். அப்போதுதான் திருட்டுச் செயலில் ஈடுபட்டுவந்த திருநெல்வேலி, திருப்பூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்களுடன் இவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் உளவு பார்த்து சொல்லும் இடங்களில், அடுத்த ஆறு பேர் கொள்ளையடிப்பது என முடிவு செய்து அதற்கு தங்களுக்குள்ளாகவே பங்கு குறித்தும் பேசிக்கொண்டனர்.

`தனி வீடுகள்தான் டார்கெட்!’ - போலி மதபோதகர், சாமியார் உட்பட 8 பேர் கும்பல் சிக்கியது எப்படி?

இதைத் தொடர்ந்து வெளியனூர், ஜக்காம்பேட்டை, முப்புளி போன்ற பகுதிகளில் கைவரிசையை காட்டிவந்துள்ளனர். திருட்டுச் செயலுக்கு முன்னதாக, வீடுகளை நோட்டமிடும்போது அந்தப் பகுதியில் கேமரா இல்லாத பகுதியாகவும், ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள வீடாகவும், தப்பிச்செல்ல ஏதுவாக உள்ள பகுதியாகவும் இருக்கிறதா என உறுதி செய்துகொண்ட பின்னர்தான் திருட்டுச் சம்பவங்களை அறங்கேற்றி வந்துள்ளனர். எட்டு பேரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 26 பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் முதலியவற்றைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அந்த எட்டுப் பேர் மீதும் 397-வது பிரிவின் கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றார்.

தஞ்சாவூர்: திருட்டு வழக்கு; காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம மரணம்! - உயரதிகாரிகள் விசாரணை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு