Published:Updated:

`குறைந்த விலையில் தரமான பொருள்கள்!’- நள்ளிரவில் கொள்ளை; பகலில் கூவிக் கூவி விற்ற தந்தை-மகன்

வாணியம்பாடியில், பூட்டிய வீடுகளைக் குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த, தந்தை-மகன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை, நீலிக்கொல்லை, சென்னாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாகப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து, தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. சமீபத்தில் மட்டும் மூன்று வீடுகளில் பூட்டை உடைத்துத் தங்க நகைகள், பைக்குகள் மற்றும் மின்சாதனப் பொருள்களை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர்.

கொள்ளையர்கள்
கொள்ளையர்கள்

வாணியம்பாடி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் அருகில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேரை மடக்கி விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் கூறினர்.

சந்தேகமடைந்த போலீஸார் தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, சென்னாம்பேட்டையைச் சேர்ந்த நஸீர்பாஷா (58) மற்றும் அவரது மகன் நவீத் (24), மில்லத் நகரைச் சேர்ந்த சிக்கந்தர் (24), வசீம் (19) ஆகியோர் என்பதும், நான்கு பேரும் சேர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்ததையும் ஒப்புக்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

பகல் முழுவதும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நள்ளிரவில் புகுந்து தங்க நகைகள், பணம் உட்பட கையில் கிடைக்கும் பொருள்களை கொள்ளையடித்துள்ளனர். பல அடகுக் கடைகளில் திருட்டு நகைகளை அடகு வைத்துள்ளனர். எல்.இ.டி டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை ``குறைந்த விலையில் தரமான பொருள் எங்களிடம் கிடைக்கும்’’ எனக் கூவிக் கூவி விற்றுள்ளனர்.

இந்தப் பணத்தில் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். நான்கு பேரில் நஸீர்பாஷாவும், அவரது மகன் நவீத்தும் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். எந்த மாதிரியான பூட்டாக இருந்தாலும் எளிதாகத் திறந்துவிடுவார்கள். தந்தை-மகன் தலைமையில்தான் மற்ற இருவரும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இருசக்கர வாகனங்கள்
இருசக்கர வாகனங்கள்

வாணியம்பாடியில் சமீபத்தில் மூன்று வீடுகளில் கொள்ளையடித்ததும் இவர்கள்தான். வேலூர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்ற மேலும் பல கொள்ளைச் சம்பவங்களிலும் இந்த நான்கு பேருக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இவர்களைக் கைது செய்த போலீஸார், இவர்களிடமிருந்து 10 பவுன் நகைகள், 3 பைக்குகள் மற்றும் 2 எல்.இ.டி டிவி-க்களையும் பறிமுதல் செய்தனர்.