Published:Updated:

மதங்கள், கடவுள்கள் குறித்து ஆபாசப் பேச்சு! - சர்ச்சை சாமியார் யோககுடில் சிவகுமார் கைதின் பின்னணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சர்ச்சை சாமியார் யோககுடில் சிவகுமார்
சர்ச்சை சாமியார் யோககுடில் சிவகுமார்

`மதம் மறப்போம்... மனிதம் வளர்ப்போம்!' என்ற போர்வையில் சிவகுமார் பதிவிடும் கருத்துகள் அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக இவர்மீது ஏற்கெனவே பலரும் காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செங்குன்றத்தை அடுத்த புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அதே பகுதியில் `யோககுடில்’ என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்திவருகிறார். அதேபோல், `வல்லரசு’ என்ற பெயரில் கட்சி ஒன்றைம் நடத்திவருகிறார். யூடியூப் சேனல் ஒன்று நடத்திவரும் சாமியார் சிவகுமார் சாதி, மதத்துக்கு எதிரான கருத்துகளைக் காரசாரமாகப் பேசி, பதிவிட்டு இணைய வெளியில் சர்ச்சைக்குப் பேர் போனவராக மாறினார். இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதக் கடவுள்கள் மற்றும் மத குருமார்களை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகத் திட்டித்தீர்த்துத் தொடர்ந்து வீடியோ பதிவிட்டுவருகிறார். `மதம் மறப்போம்... மனிதம் வளர்ப்போம்!' என்ற போர்வையில் சிவகுமார் பதிவிடும் கருத்துகள் அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக இவர்மீது ஏற்கெனவே பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பொன்னேரி காவல் நிலையத்தில் இவர்மீது அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் பேரில், பொன்னேரி காவல்துறையினர் இவரைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று யோககுடில் சிவகுமார் வெளியில் வந்தார்.

சிவகுமார்
சிவகுமார்

ஆனால் , சிவகுமார் அதற்குப் பிறகும் தொடர்ந்து அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், புதூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் யோககுடில் சிவகுமார் மீது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மணிகண்டன் தனது புகாரில், ``அனைத்து மதத்தினரும், சாதியினரும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தில் நபிகள் நாயகம், இயேசு, சிவபெருமான் என அனைத்து மதக் கடவுள்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி, ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவிட்டுவருகிறார். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பேசிவரும் சிவகுமார்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மணிகண்டனின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட உறையூர் போலீஸார், உறையூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிவகுமாருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், சிவகுமார் ஆஜராகாமல் இருந்துவந்தார். இந்தநிலையில், அவரின் யூடியூப் சேனல் குறித்தும், ஆபாசப் பேச்சுகள் குறித்தும் வெவ்வேறு மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததையடுத்து யோககுடில் சிவகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் கட்சிக்கொடியுடன் கழுத்தில் மாலை, கூலிங் கிளாஸ் எனச் சிறிதும் பயமில்லாமல் உறையூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில், ``நான் எனது ஆதரவாளர்களிடம் பேசுவதற்காகவே தனியாக சேனல் ஆரம்பித்து, அவர்களுக்கு எனது கருத்துகளை வழங்கிவருகிறேன். மதகுருமார்கள் யாரும் என்னுடைய வீடியோக்களைப் பார்க்க வேண்டாம் என்று வீடியோவின் தொடக்கத்திலேயே கூறிவிடுகிறேன். அதனால் என்னுடைய வீடியோக்கள் எதையும் நீக்க முடியாது. நான் எதையும் சந்திக்கத் தயார்" என்று போலீஸாரிடமே தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, உறையூர் போலீஸார் சர்ச்சை சாமியார் சிவகுமாரின் வாக்குமூலத்தைக் குறித்து வைத்துக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனர். சிவகுமாரைக் கைதுசெய்வது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து ஆலோசித்துவந்தனர்.

போலீஸாரின் எச்சரிக்கையை மதிக்காத சாமியார் சிவகுமார் உறையூரிலிருந்து வந்த சில நாள்களிலேயே மீண்டும் தனது அடுத்த வீடியோவுக்கான வேலைகளை ஆரம்பித்தார். நேற்றைய தினம் புழல் காவல் நிலையத்தில் யோககுடில் சிவகுமார்மீது மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி சாதிக் பாஷா என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், "சென்னை புழல் அருகிலுள்ள புத்தாகரம், அன்னை இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் யோககுடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவருகிறார்.

புகார்
புகார்
புழல் காவல் நிலையம்
புழல் காவல் நிலையம்

சிவகுமார் தனது யூடியூப் சேனலில் மதக்கடவுள்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாகக் கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார். இஸ்லாம் மார்க்கம் குறித்தும், இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாமியப் பெண்கள் குறித்தும் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுவருகிறார். அதேபோல், பிற மதத்தினரையும் மதக்கடவுள்களையும் கொச்சையாகப் பேசிவருகிறார். வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தியும், மக்களின் உணர்ச்சிகளை தூண்டியும் பொது அமைதிக்கும், இந்திய இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கும் நோக்கத்தில் சிவகுமார் செயல்பட்டுவருகிறார். எனவே யோககுடில் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று பாஷா குறிப்பிட்டிருக்கிறார்.

``என்னால் மட்டும்தான் எல்லாம் முடியும்” பலரிடம் மோசடி செய்த போலிச் சாமியார் கைது!

சாதிக் பாஷாவின் புகாரைப் பெற்றுக்கொண்ட புழல் போலீஸார், சிவகுமார் மீது ஐ.பி.சி 153 (A) மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சி செய்வது, 295 (A) தெய்வ நிந்தனைச் சட்டம் 298, மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என மொத்தம் எட்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மாதவரம் காவல் துணை ஆணையர் சுந்தரவதனம் சாமியார் சிவகுமாரைப் பிடிக்க மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார். இன்று தனிப்படை போலீஸார் யோககுடில் சிவகுமாரை அதிரடியாகக் கைதுசெய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு