ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு, கடந்த மாதம் காதலனுடன் வந்த விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை போதைக் கும்பல், காதலன் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் பத்மேஸ்வரன் (24), தினேஷ்குமார் (23), அஜித் (24) ஆகிய மூன்று பேரை சாயல்குடி போலீஸார் கைதுசெய்தனர். ஆனால், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடிமறைத்து, வழிப்பறி வழக்காக போலீஸார் பதிவு செய்ததாக நீதிமன்றம் கண்டித்ததோடு, அந்த வழக்கைப் பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி எஸ்.பி தலைமையிலான போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவுசெய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மூன்று பேரையும் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, அவர் காதலன் இருவரும் அடையாளம் காட்டினர். பின்னர் இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது இந்தக் கூட்டுப் பாலியல் சம்பவத்தின்போது அந்தப் பகுதியில் யாரும் வந்துவிடாத வகையில், குற்றவாளிகளில் ஒருவனின் 17 வயது சகோதரன் நோட்டம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுவனை சாயல்குடி போலீஸார் பரமக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, மதுரை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.