Published:Updated:

2017-ல் லஞ்சம்; 2019-ல் நடவடிக்கை! - பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, 2 ஏட்டுகள் டிஸ்மிஸ்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

லாரியில் அனைத்து ஆவணங்கள் மற்றும் அனுமதி ரசீதுகள் இருந்தும்கூட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு லாரியை கொண்டு சென்றனர்.

இன்ஸ்பெக்டர் வனிதா ராணி
இன்ஸ்பெக்டர் வனிதா ராணி

மணல் லாரியை விடுவிக்க அதன் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை பணிநீக்கம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Representational image
Representational image

விருதுநகர் மாவட்டத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வனிதா ராணி. இவர் 2017-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றினார். அப்போது தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு அதிகளவு மணல் கடத்தல் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தமிழக- கேரள எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு மணல் தடுப்பு பறக்கும்படையினர் சோதனை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான மணல் தடுப்பு பறக்கும்படையினர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி கேரளாவுக்குச் செல்ல இருந்த மணல் லாரியை மறித்து சோதனை நடத்தினர். அந்த லாரியில் அனைத்து ஆவணங்கள் மற்றும் அனுமதி ரசீதுகள் இருந்தும்கூட ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு லாரியை கொண்டு சென்றனர். ஆனால், காவல் ஆய்வாளராக இருந்த வனிதா ராணி வழக்கு பதிவு செய்யாமல் லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அவர் லஞ்சம் தர மறுத்ததால் லாரியை தாசில்தாரிடம் ஒப்படைத்து அபராதம் விதித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் லாரி உரிமையாளர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

வனிதா ராணி
வனிதா ராணி

விசாரணையில், காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமைக் காவலர்கள் ரமேஷ், ஜோஷ் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக டிஜிபிக்கு அறிக்கை அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமைக் காவலர்கள் ரமேஷ், ஜோஸ் ஆகிய 4 பேரையும் பணிநீக்கம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். தற்போது வனிதாராணி விருதுநகர் காவல்துறையிலும் செந்தில்வேல், ரமேஷ் , ஜோஸ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.