Published:Updated:

`அந்த 2 ஏடிஎம் கார்டுகள் எங்கே?' - கொள்ளையன் பணத்தைக் களவாடிய பெண் இன்ஸ்பெக்டர்

வேலியே பயிரை மேய்ந்ததுபோல ரயில் கொள்ளையனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட15 ஏடிஎம் கார்டுகளில் இரண்டு கார்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாயை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி எடுத்த குற்றத்துக்காக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் கயல்விழி
இன்ஸ்பெக்டர் கயல்விழி

ஏ.சி. ரயில் பெட்டிகளில் பயணிப்பவர்களிடம் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான புகாரின்பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கடந்த மே மாதம் 7-ம் தேதி கேரளா, திரிச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவை கைது செய்தனர். விசாரணையில் சாகுல் ஹமீது கடந்த 4 ஆண்டுகளாக ஏ.சி. ரயில் பெட்டிகளில் பயணித்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 119 சவரன் நகைகளும் ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சாகுல் ஹமீது
சாகுல் ஹமீது

இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டதாக அப்போதைய சென்ட்ரல் ரயில்வே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கயல்விழியை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர். தற்போது அவர் வில்லங்கத்தில் சிக்கியுள்ளார். பிரபல ரயில் கொள்ளையன் சாகுல் ஹமீது திருடிய பணத்தில் மலேசியாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஹோட்டல் ஒன்றை நடத்திவருவதும் அங்கு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 15 ஏடிஎம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் 13 ஏடிஎம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதை யாரும் அப்போது கண்டுபிடிக்கவில்லை.

இந்தநிலையில், ரயில் கொள்ளை தொடர்பாக சென்ட்ரல் ரயில்வே போலீஸார் சாகுல் ஹமீதுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர், 15 ஏடிஎம் கார்டுகள் தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார். இதைக்கேட்டு ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் கயல்விழியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், 13 ஏடிஎம். கார்டுகளை மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 15 ஏடிஎம். கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் 13 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதை யாரும் அப்போது கண்டுபிடிக்கவில்லை.
போலீஸ் விசாரணை அதிகாரி

இருப்பினும் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள், இன்ஸ்பெக்டர் கயல்விழியை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது தி.நகர் பகுதியிலிருந்து சாகுல் ஹமீதுவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஏடிஎம்-களிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் எடுக்கப்பட்ட ரகசிய தகவல் ரயில்வே போலீஸாருக்கு கிடைத்தது. சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து சில தகவல்களை ரயில்வே போலீஸ் அதிகாரிகள் பெற்றனர். தொடர்ந்து பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது பணம் எடுத்தது இன்ஸ்பெக்டர் கயல்விழி என்பது தெரியவந்தது. இதனால் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஆதாரங்களுடன் இன்ஸ்பெக்டர் கயல்விழியிடம் ரயில்வே போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தவற்றை ஒப்புக்கொண்டு பணத்தைத் திரும்பக் கொடுப்பதாகக் கூறினார். இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கயல்விழி, இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தவிதப் பதவியும் வழங்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் வேப்பேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்வே கொள்ளையன் சாகுல் ஹமீதுவின் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் கயல்விழியை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

பிரபல ரயில் கொள்ளையன் சாகுல் ஹமீதுவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ரயில்வே டிக்கெட் பரிசோதகர் உதவியால் ஏ.சி. ரயில் பெட்டியில் பயணித்த சாகுல் ஹமீதுவைப் பிடித்து அவரிடமிருந்து நகைகள், ஏடிஎம். கார்டுகள், லேப் டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். அவரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்தச் சமயத்தில்தான் சாகுல் ஹமீதுவின் வங்கி கணக்கிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் ஏடிஎம் மூலம் எடுக்கப்பட்ட தகவல் எங்களுக்குக் கிடைத்தது. சிறையில் அவர் இருக்கும் சமயத்தில் எப்படி பணம் எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம் மையத்துக்குச் சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது இன்னொரு அதிர்ச்சி போலீஸாருக்கு காத்திருந்தது.

ரயில் கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கயல்விழி, சாகுல் ஹமீதுவின் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுத்ததற்கான ஆதாரங்களுடன் சிக்கினார். இதனால் அவரிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதற்குள் அவர் சென்ட்ரல் குற்றப்பிரிவிலிருந்து காத்திருப்பு பட்டியலுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி. மற்றும் கமிஷனருக்கு ஆதாரங்களுடன் ரிப்போர்ட் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இன்ஸ்பெக்டர் கயல்விழி, பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் கயல்விழி, தமிழக காவல்துறையில் 2004-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராகப் பணிக்கு சேர்ந்தவர். பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக உள்ளார்.

சாகுல் ஹமீதுவின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் ஏடிஎம். மூலம் எடுக்கப்பட்ட தகவல் எங்களுக்கு கிடைத்தது. சிறையில் அவர் இருக்கும் சமயத்தில் எப்படி பணம் எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.
போலீஸ் விசாரணை அதிகாரி

இன்ஸ்பெக்டர் கயல்விழியிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.

இன்ஸ்பெக்டர் கயல்விழியின் பேட்ஜ் இன்ஸ்பெக்டரும் அவரின் நெருங்கிய தோழியுமான ஒருவரிடம் பேசினோம். ``இன்ஸ்பெக்டர் கயல்விழி, பணியில் திறம்பட செயல்படுபவர். அவரிடம் கொடுக்கும் அசைமென்ட்களை திறம்படச் செய்து முடிப்பார். அவர் எப்படி இந்தக் குற்றச்சாட்டில் சிக்கினார் என்பது தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ஏடிஎம். கார்டுகளைப் பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படும் என்பதுகூட இன்ஸ்பெக்டர் கயல்விழிக்கு தெரியாதா? முழுமையாக விசாரித்தால்தான் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரும்" என்றார்.