Published:Updated:

தம்பி வாங்கிய கடன்; அண்ணனைக் கடத்தி மிரட்டிய ஆய்வாளர்! - 7 பேர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு

திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்

தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனைக் கடத்தி மிரட்டி, பணம் பறிப்பதற்கு உடந்தையாகச் செயல்பட்ட சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது திருச்செந்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன். இவர், அரியநாயகிபுரத்திலுள்ள அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் தம்பி தேவராஜ், சினிமாத்துறையில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துவருகிறார். தேவராஜுக்கும், திரைப்பட இயக்குநர் சிவக்குமார் நாயருக்கும் தொழில்ரீதியாகப் பணப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது. தேவராஜால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், அரசுச் சம்பளம் பெறும் சாலமோனைக் கடத்தி பணத்தை வசூல் செய்துகொள்ளலாம் என சிவக்குமார் நாயர், ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு காவலர்களுடன் கடந்த 2020, அக்டோபர் 23-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்து சாலமோனைச் சென்னைக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.

சிவக்குமார்
சிவக்குமார்

செல்லும் வழியில் காருக்குள்ளேயே சாலமோனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ”உன் தம்பி எனக்கு ரூ.21 லட்சம் பணம் தரணும். உன்னை உயிரோட விடணும்னா, உன் தம்பி கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடு. யாருக்கு போன் செஞ்சு பணம் கேட்பியோ கேளு” என சிவக்குமார் சாலமோனிடம் காரில் செல்லும்போதே சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து சாலமோன், தன் மனைவி புஷ்பராணியிடம் போனில் பேசி, சென்னையிலுள்ள அவரின் தங்கையின் கணவர் ஸ்டீபன் மூலம் ரூ.4,50,000 பணம் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதில், ரூ.1.5 லட்சத்தை கமிஷன், வேன் வாடகையாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள ரூ.3 லட்சத்தை சிவக்குமாரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகே சாலமோன் விடுவிக்கப்பட்டார். சட்ட விரோதமாக கடத்திச் சென்று பணம் பறித்த ஆய்வாளர் அமுதா, சிவக்குமார் நாயர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலமோனின் மனைவி புஷ்பராணி திருச்செந்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி., டி.ஜி.பி-க்கு புகார் மனுவை அனுப்பினார்.

ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன்
ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன்

ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. என்ன நடந்தது என ஆசிரியர் சாலமோனிடம் பேசினோம். ``என் தம்பி தேவராஜ் சென்னையில சினிமாத்துறையில கேமராமேனா இருக்கான். நான் சொந்த ஊருலயே பிரைமரி ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்குறேன். ஏதாவது திருவிழா, விசேஷம்னா மட்டும்தான் தம்பி ஊரு பக்கம் வருவான். மத்தபடி அவன் எவ்வளவு சம்பளம் வாங்குறான், என்ன செய்யுறான், அவனோட கொடுக்கல் வாங்கல்னு எதுவுமே எனக்குத் தெரியாது. 21.10.20 அன்று, என் மனைவியின் அண்ணன் மகனோட கல்யாணத்துக்காக குடும்பத்தோட சோலைக்குடியிருப்பு கிராமத்துக்குப் போனோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

23-ம் தேதி சாயங்காலம் வரவேற்பு நிகழ்ச்சியில சாப்பாடு பரிமாறிக்கிட்டிருந்தேன். என்னோட அக்கா மகன் தினேஷ், ``மாமா, உங்களை ஏதோ விசாரிக்கணுமாம். போலீஸ்காரங்க வந்திருக்காங்க”ன்னு சொன்னான். என்ன விஷயம்னு தெரியலயேன்னு நானும் போனேன். டெம்போ வண்டியில ஆறு பேரு இருந்தாங்க. அப்போ சிவக்குமர் நாயார், என்னைப் பார்த்து, ``நீதான் சாலமோனா? உன் தம்பி, எங்கிட்ட கடனை வாங்கிட்டு ஓடிட்டான்”ன்னு சொன்னார். பக்கத்துல இருந்த இன்ஸ்பெக்டர் அமுதா ”உங்கிட்ட விசாரிக்கணும். வா, திருச்செந்தூர் ஸ்டேஷனுக்குப் போலாம்”னு சொல்லி வண்டியில ஏத்தினாங்க.

போலீஸாரால் கடத்தப்பட்ட ஆசிரியர் சாலமோன்
போலீஸாரால் கடத்தப்பட்ட ஆசிரியர் சாலமோன்

திருச்செந்தூர் ஊருகுள்ள போகாம, திருநெல்வேலி ரூட்டுல வண்டியத் திருப்பிட்டாங்க. ``என்ன மேடம், திருச்செந்தூர் ஸ்டேஷன்னு சொல்லிட்டு வேற வழியா கூட்டிட்டுப் போறீங்க?”ன்னு கேட்டேன். இடையில வண்டியை நிறுத்தி, ``என் பேன்ட் பெல்டை எஸ்.ஐ ரமேஷ் கண்ணன் கழட்டி, அமுதா மேடத்துட்ட கொடுத்தார். கூட இருந்த மத்த போலீஸ்காரங்க. என் கையப் பிடிச்சு, வாயையும் பொத்திட்டாங்க. அந்தம்மா பெல்ட்டால இன்ன இடம்னு இல்லாம கண்மூடித்தனமா அடிச்சாங்க. வலி பொறுக்க முடியாம அழுதேன்.

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

``ஏய் வாத்தியாரே, இவர்ட்ட (சிவக்குமார் நாயர்) உன் தம்பி, தொழிலுக்காக இருவத்தோரு லட்சம் பணம் வாங்கிருக்கான். அவன் எஸ்கேப் ஆயிட்டான். அந்த ரூவாய நீதான் தரணும். ஒழுங்கு மரியாதையா சொந்தக்காரங்க எவன் கையில கால்ல விழுந்தாவது ரூவாயை ரெடி பண்ணு. இல்லேன்னா, கொன்னு தூக்கி வீசிட்டுப் போயிருவேன்’’னு சொன்னாங்க. ‘அவன் பணம் வாங்கினதுக்கு நான் எப்படித் தர முடியும்”னு அழுதுக்கிட்டே கேட்டேன்.

ரஜீஸ் ரூபஸ் - வழக்கறிஞர்
ரஜீஸ் ரூபஸ் - வழக்கறிஞர்

அதுக்கு கழுத்தை நெரிச்சு ரெண்டு காதுலயும் கையால ஓங்கி அடிச்சாங்க. நான் அப்படியே கிறங்கிட்டேன். வலியால நான் துடிக்கிறதைப் பார்த்து அந்த சிவக்குமார் நாயர் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தார். என்னை வண்டியில போட்டு மறுநாள் காலையில சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போகாம வேற ஒரு இடத்துல வெச்சிருந்தாங்க. என் தங்கச்சி மாப்பிள்ளைகிட்ட அவசர பணத் தேவைன்னு சொல்லி 5 லட்சம் ரூபாய் கேட்டேன். நாலரை லட்சம் கொண்டு வந்து கொடுத்தார் .

அதுல எங்களோட செலவுக்கு ஒன்றரை லட்சம் வேணும்னு அமுதா மேடம் எடுத்துக்கிட்டாங்க. மிச்சம் இருந்த மூணு லட்சத்தை சிவக்குமார் நாயரிடம் கொடுத்துட்டாங்க. `நடந்ததை வெளியே சொன்னா உன்னயும் உன் பிள்ளைகளையும் கொன்னுருவோம்’னு சொல்லி மிரட்டி அனுப்பிட்டாங்க. இது சம்பந்தமா திருச்செந்தூர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன்” என்றார்.

இது குறித்து சாலமோனின் வழக்கறிஞரான ராஜீவ்ரூபஸ், ``இவர்மீது சட்டப்படியா நடவடிக்கை எடுக்கலாமா, விசாரணைக்கு அழைக்க முகாந்திரம் இருக்கானு யோசிக்காம காவல்துறை தன் அதிகாரத்தை பயன்படுத்தி, அடியாட்கள்போல நடந்து கொண்டிருக்கிறார்கள். சென்னையிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி, தூத்துக்குடியில் இருக்கும் ஒருவரை விசாரிக்க அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.,க்கும், சம்மந்தப்பட்ட லோக்கல் ஸ்டேஷனுக்கும் தகவல் சொல்ல வேண்டும். போலீஸாரின் வாகனத்தில் வராமல், யூனிபார்ஃம் அணியாமல் சிவக்குமார் நாயருக்கு ஆதராக கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பெற்றுக் கொடுக்க செயல்பட்டிருக்கிறார் ஆய்வாளர் அமுதா.

திருச்செந்தூர் நீதிமன்றம்
திருச்செந்தூர் நீதிமன்றம்

அவரிடமிருந்து பணம் பெற்றாலும், அதை நீதிமன்றத்தின் மூலமாகத்தான் சம்பந்தப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும். இதை எதையுமே அவர் பின்பற்றவில்லை. இவை அனைத்துமே சட்ட விதிமீறல்கள்தான்” என்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், மீண்டும் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் சாலமோனின் வழக்கை விசாரித்த நீதிபதி, ``இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திருச்செந்தூர் தாலுகா போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில், திரைப்பட இயக்குநர் சிவக்குமார், சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் நான்கு போலீஸார் ஆகிய 7 பேர் மீது ஆள் கடத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல், அச்சுறுத்திப் பணம் பறித்தல், அச்சுறுத்தி ஆவணங்களைத் தயார் செய்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு