Published:Updated:

`இங்கேதான் புதைத்தேன்!' - கரூர் போலீஸாருக்கு அதிர்ச்சிகொடுத்த தந்தை

குழந்தை புதைக்கப்பட்ட இடம்
குழந்தை புதைக்கப்பட்ட இடம் ( நா.ராஜமுருகன் )

இறந்த குழந்தையை அந்தத் தம்பதி அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தங்களது தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.

கரூரில் காவல்துறைக்குத் தெரியாமல் மர்மமாக இறந்த தங்களது பெண் குழந்தையைப் புதைத்த தம்பதியிடம், குழந்தை தானாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

குழந்தை புதைக்கப்பட்ட இடம்
குழந்தை புதைக்கப்பட்ட இடம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள தோகைமலை அருகே உள்ள வடுகப்பட்டி, கிழக்குமேடு பகுதியைச் சேர்ந்தவர், சிவசிங்கபெருமாள். இவரின் மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு சசினா (10), சாதனா (7) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

`9 வருடங்களில் 6 குழந்தைகள்; சந்தேக வளையத்தில் தம்பதிகள்!'- கேரளாவை உலுக்கும் மர்ம மரணங்கள்

இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சங்கீதாவுக்கு, கடந்த 10-ம் தேதி பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, தம்பதி குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டனர். ஆனால், கடந்த 14-ம் தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, பஞ்சப்பட்டி ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

சிவசிங்கபெருமாளிடம் விசாரணை
சிவசிங்கபெருமாளிடம் விசாரணை
நா.ராஜமுருகன்

பின்னர், மேல்சிகிச்சைக்காக குளித்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த நிலையில், குழந்தை இறந்ததில் மர்மம் இருப்பதாக சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பிரபுவிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, சிவசிங்கபெருமாள் - சங்கீதா தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், இறந்த குழந்தையை அந்தத் தம்பதி அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தங்களது தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது. புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு செய்தனர். அதனால், நேற்று மதியம் குழந்தையின் தந்தையான சிவசிங்கபெருமாளை போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். பின்னர், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகாமுனி முன்னிலையில், புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், குழந்தை உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.

குழந்தை புதைக்கப்பட்ட இடம்
குழந்தை புதைக்கப்பட்ட இடம்

அப்போது, பஞ்சப்பட்டி வருவாய் அலுவலர் ரமேஷ், போத்துராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அன்புராஜ், தோகைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் குழந்தையின் உள்ளுறுப்புகளை எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுக்குப் பின்னர்தான் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும். ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்த விரக்தியில் அந்தக் குழந்தையின் பெற்றோரே குழந்தையின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். பெண் குழந்தையின் மரணமும், அதைத்தொடர்ந்த போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையும் தோகைமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு