Published:Updated:

தஞ்சாவூர் : ``கலெக்டர் உதவியாளர் பேசுறேன்; நிதி கொடுங்க!’’ அதிரவைத்த மர்ம நபர்; போலீஸ் விசாரணை!

தஞ்சை கலெக்டர் அலுவலகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம்

கலெக்டர் பெயரைத் தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மணிமாறன் என்பவர் யார் என்ற விசாரணையில் சைபர் க்ரைம் போலீஸார் இறங்கினர்.

தஞ்சாவூர் கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் போனில் பலரிடம் பேசி, கொரோனா நிவாரண நிதி கேட்டு மோசடி செய்ய முயன்ற தகவல் தெரியவர, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில், மர்ம நபர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
ம.அரவிந்த்

தஞ்சாவூர் மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த ஜூன் 16-ம் தேதி பொறுப்புபேற்றுக்கொண்டதும் விவசாயத்தை ஊக்குவித்தல், சாகுபடி பரப்புகள் மற்றும் மகசூல் அதிகரிப்பதற்கான செயல்கள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேகம் காட்டினார்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக டாக்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், ``நான் கலெக்டரின் நேர்முக உதவியாளர். என்னோட பேர் மணிமாறன். கொரோனா மற்றும் பல்வேறு நிவாரணப் பணிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. நீங்கள் வழங்கும் நிதியை கலெக்டர் நிவாரணப் பணிக்கு பயன்படுத்தவிருக்கிறார். தங்களால் முடிந்த நிதி உதவியை அளியுங்கள்’’ எனக் கேட்டதுடன், ``நீங்க கொடுக்க நினைக்கும் பணத்தை வங்கி எண் தருகிறோம். அந்த அக்கவுன்ட்டுக்கு அனுப்புங்க’’ என்று கூறி வங்கிப் பெயர் மற்றும் அக்கவுன்ட் நம்பரையும் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த நபர் இதுபோல் பலரிடம் பேசியதாகத் தெரிகிறது. நிவாரண பணிக்காகத்தானே நிதி கேட்கிறார்கள். வழங்கலாம் என நினைத்த சிலர் எதுக்கும் கலெக்டர்கிட்ட ஒரு வார்த்தை பேசிடுவோம் என கலெக்டரிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அதிர்ந்துபோன கலெக்டர், ``நான் யாரிடமும் நிதி கேட்கவில்லை. யாரும் எந்த வங்கிக் கணக்குக்கும் பணம் அனுப்பதீர்கள’’ என உஷார்படுத்தியிருக்கிறார்.

உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கும் உத்தரவிட்டார். அத்துடன் கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எச்சரிக்கை செய்யும்விதமாக அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில், ``கலெக்டர் பெயரைப் பயன்படுத்தி, சிலர் போன் மூலம், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனவே, கலெக்டர் பெயரைச் சொல்லி நிதி உதவி கேட்டு ஏதேனும் அழைப்புகள் வந்தால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.’’

அத்துடன் ``போன் வந்திருந்தாலோ, வந்தாலோ உடனடியாக போலீஸாரிடம் தெரியப்படுத்தி புகார் அளிக்க வேண்டும். கலெக்டர் பெயரைத் தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மணிமாறன் என்பவர் யார் என்ற விசாரணையில் சைபர் க்ரைம் போலீஸார் இறங்கினர். சைபர் க்ரைம் போலீஸ் எஸ்.ஐ கார்த்தி தலமையிலான போலீஸார் விசாரணைக்காக நேற்றே கோவை புறப்பட்டுச் சென்றனர்.

மணிமாறன் என்பது ஒரிஜினல் பெயரா அல்லது பெயரை மாற்றிச் சொன்னாரா என்பதை அவர் பேசிய மொபைல் நம்பர், அவர் பணம் அனுப்பச் சொல்லி கொடுத்த பேங்க் அக்கவுன்ட் நம்பர் ஆகிவற்றை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் தரப்பில் பேசினோம். ``அந்த மர்ம நபர் அபழைத்துப் பேசிய ஐந்துய் பேரிடமும் விசாரணை செய்தோம். யாரும் அனுப்பி ஏமாறவில்லை என்பது தெரியவந்தது. பேசியவர் குறித்து எந்தத் துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்நது விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு