குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை மும்தாஜ் நடித்திருக்கிறார். இவரின் வீடு, அண்ணாநகர் எச் பிளாக் 2-வது தெருவில் இருக்கிறது. இந்த நிலையில், நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக வீட்டு வேலைகளைச் செய்து வரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன், அவரின் சகோதரியான 17 வயதாகும் சிறுமி, நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசினர். அப்போது நடிகை மும்தாஜ் வீட்டில் எங்களுக்கு வேலைப்பார்க்க விருப்பம் இல்லை என்று கூறினர்.

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, போலீஸார் நடிகை மும்தாஜின் வீட்டுக்குச் சென்று இளம்பெண்ணையும், சிறுமியையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் அரசு காப்பகத்தில் சேர்த்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் குழந்தைகள் நல அலுவலர்கள், 17 வயது சிறுமியிடம் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு நடிகை மும்தாஜிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார், ``காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்பேரில் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண், 17 வயது சிறுமியிடம் முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளோம். ஆனால் அவர்கள் யாரும் இதுவரை காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை. விசாரணையில் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலைப்பார்க்க பிடிக்கவில்லை என்று இருவரும் கூறினர். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதையடுத்து இருவரையும் அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளோம். இந்தச் சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவர் உள்ளதால் அவரிடம் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் விசாரித்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இது குறித்து குழந்தைகள் நல அலுவலர்களிடம் கேட்டதற்கு, `` நடிகை மும்தாஜ் வீட்டில் இளம்பெண்ணும், சிறுமியும் சில ஆண்டுகளாக வேலைப்பார்த்து வந்துள்ளனர். இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிறுமியை வேலைக்கு சேர்த்தது யார் என்று விசாரித்து வருகிறோம். குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வீட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. இதுதவிர பணி செய்த இடத்தில் சிறுமிக்கும், பெண்ணுக்கும் என்ன நடந்தது என்றும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.