தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பொம்மனஹள்ளியை அடுத்த, அய்யர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (47). வழக்கறிஞரான இவர் நேற்று மாலை, தனது ஜூனியர் வழக்கறிஞர்களான அருள், கோகுல கண்ணன், மர்ம நபர்கள் இருவரை அழைத்துக்கொண்டு, தனது காரில் கிருஷ்ணகிரி வந்து கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே காரை நிறுத்தி, ‘வழக்கு தொடர்பான ஃபைல் வரும் வாங்கி வையுங்கள்’ எனக் கூறி, தனது ஜூனியர்களை இறக்கிவிட்டிருக்கிறார்.
பின்னர் இருவருடன் கிருஷ்ணகிரி சென்ற சிவக்குமார் வெகுநேரமாகியும் திரும்பி வராததால், ஜூனியர்கள் அவருக்கு போன் செய்தபோது ‘ஸ்விட்ச் ஆஃப்’ என வந்திருக்கிறது. அதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், சிவக்குமாரின் மனைவிக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் குருபரப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

ரோந்து சென்ற போலீஸார் குருபரப்பள்ளி அருகே ரோட்டோரம் வெகுநேரமாக நின்றிருந்த சிவக்குமாரின் காரை சோதனையிட்டபோது, அதில் காயங்களுடன் அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சிவக்குமார் கொலை செய்யப்பட்டாரா? சிவக்குமாருடன் பயணித்த இருவர் யார்? என்ற கோணங்களில், சந்தேக மரணம் குறித்து, குருபரப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இது குறித்து குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணனைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘சிவக்குமார் தர்மபுரி கோர்ட்டிலிருந்து, ஜூனியர்கள், மேலும் இருவருடன் கிருஷ்ணகிரி வந்திருக்கிறார். ஜூனியர்களை இறக்கிவிட்டு, மீதமுள்ள இருவருடன் பயணித்திருக்கிறார். அந்த இருவர் யார் என சிவக்குமாரின் ஜூனியர்களுக்கே தெரியவில்லை. அவரின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை வந்த பிறகுதான், கொலைசெய்யப்பட்டாரா, அவரின் இறப்புக்கான உண்மைக் காரணம் என்ன என்பது தெரியவரும். தற்போது, IPC 174 (சந்தேக மரணம்) என வழக்கு பதிவுசெய்து விசாரிக்கிறோம்’’ என்றார்.