`எஸ்.எஸ்.ஐ கொலையாளிகளின் பயங்கரவாத தொடர்பு!' - மருத்துவச் சோதனைக்குப் பிறகு தொடரும் விசாரணை

``பயங்கரவாத இயக்கத்திற்கு காஜா முகைதீன் என்பவரே தலைவர் எனக் கூறியுள்ளனர். காஜா முகைதீன் ஏற்கெனவே டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்''.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் கொலையாளிகள் அப்துல் சமீம், தெளஃபீக் எனத் தெரியவந்தது. இதையடுத்து தமிழக, கேரள போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலியத்தில் வைத்து பயங்கரவாதிகள் தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 16-ம் தேதி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அழைத்துவரப்பட்டு விசாரணைக்குப் பின் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கடந்த 21-ம் தேதி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக எர்ணாகுளம் அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பேருந்துநிலையம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையிலிருந்து கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மீட்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் வைத்து கத்தி மீட்கப்பட்டது. பின்னர் கொலை நடந்த களியக்காவிளைக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், இப்போது அவர்களின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐயைக் கொலை செய்துவிட்டு பாறசாலை வரை நடந்து சென்றவர்கள், அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து திருவனந்தபுரம் சென்றிருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் கத்தியை வீசியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் எர்ணாகுளம் சென்றிருக்கிறார்கள். எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் துப்பாக்கியை வீசியவர்கள் அங்கிருந்து ரயிலில் மகாராஷ்டிரா சென்று, பின்னர் உடுப்பி வந்தவர்கள் போலீஸில் சிக்கினார்கள்.

கொலையாளிகளை திருவனந்தபுரம், எர்ணாகுளம் அழைத்துச் சென்று கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பின்னர், களியக்காவிளை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, கொலை செய்தது குறித்து நடித்துக் காட்டினர். எஸ்.எஸ்.ஐ. கொலை குறித்து விசாரணை ஓரளவு நடைபெற்றுவிட்டது. இனி அவர்களின் தீவிரவாதத் தொடர்பு குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவர்களின் பயங்கரவாத இயக்கத்திற்கு காஜா முகைதீன் என்பவரே தலைவர் என விசாரணையில் கூறினர். காஜா முகைதீன் ஏற்கெனவே டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து விசாரணை நடக்கும் நிலையில் நேற்று இரவு பயங்கரவாதிகள் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து இன்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. வரும் 31-ம் தேதி அவர்கள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.