Published:Updated:

`காரைக்காலில் சூதாட்டம் நடத்திய தலைமைக் காவலர்!’ - கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்த அதிரடிப்படை

சூதாட்டத்தை கடலோரக் காவல் துறை தலைமைக் காவலர் காந்திதான் நடத்தி வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட காவல் அலுவலகம், காரைக்கால்
மாவட்ட காவல் அலுவலகம், காரைக்கால்

காரைக்காலில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்திய கடலோரக் காவல்துறை தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வருபவர் காந்தி. தற்போது இவர் காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்தில் சிறப்பு நிலை தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தி வருவதாக காரைக்கால் அதிரடிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காரைக்கால் கடற்கரைச் சாலை அருகில் அம்மன் கோயில் பத்து என்னுமிடத்தில் ஒரு கருவேல மரத்தின்கீழ் பொது இடத்தில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையில் அங்கு சென்ற அதிரடிப்படை போலீஸார் அங்கு சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். கடலோரக் காவல் துறை சிறப்புநிலை தலைமைக் காவலர் காந்தி, அவரோடு சூதாட்டத்தில் ஈடுபட்ட பியூல்லா, வெள்ளிச் சிவம் , கலைமணி மற்றும் பிரசாந்த் ஆகிய 5 பேரும் அதிரடிப்படை காவலர்களால் கைது செய்யப்பட்டு நகரக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நகரக் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து 21 ஆயிரம் ரொக்கப் பணமும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத சூதாட்டத்தை கடலோரக் காவல் துறை தலைமைக் காவலர் காந்திதான் நடத்தி வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

`காரைக்காலில் சூதாட்டம் நடத்திய தலைமைக் காவலர்!’ - கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்த அதிரடிப்படை

காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் நடந்து வந்துள்ளன. மேலும், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெற்ற சூதாட்டத்தை ஒரு சிறப்பு நிலை காவலரே நடத்தி வந்துள்ளார். இச்செயல், காவலர்கள் மத்தியில் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.