Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: `ஸ்டேஷனிலேயே பாதுகாப்பு இல்லை!’ - பாலியல் தொல்லையால் அதிகாரிகளிடம் குமுறிய பெண் காவலர்

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( representational image )

`ஒரு பெண் போலீஸான எனக்கு, அதுவும் நம்ம போலீஸ் ஸ்டேஷனிலேயே பாதுகாப்பு இல்லை. என்னிடம் தவறாக நடக்க முயன்ற முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் புகார் அளித்துள்ளார் பெண் காவலர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு வந்த ஆயுதப்படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு அந்த ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர் ஒருவர், காவல் நிலையத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மன்பேட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (29). இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றிவருகிறார். இந்தநிலையில் இதே காவல் நிலையத்துக்கு நான்கு நாள்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து பெண் காவலர் ஒருவர் பணிக்கு வந்திருக்கிறார். தினமும் தனது பணியை முடித்த பிறகு இரவு நேரத்தில் காவல் நிலையத்தின் மாடியிலுள்ள ஓய்வு அறையில் தங்கிவந்திருக்கிறார்.

இதேபோல் முருகானந்தமும் டூட்டி முடிந்த பிறகு ஆண் போலீஸுக்கான அறையில் தங்கிவந்திருக்கிறார். முருகானந்தம் உள்ளிட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடும்போது ஒரே இடத்தில் பணிபுரியும் சக போலீஸ் என்கிற அடிப்படையில் அந்தப் பெண் காவலர் முருகானந்தத்திடம் சகஜமாகப் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் இரவு நேரத்தில் மாடியிலுள்ள அறைக்கு வந்தபோதும், வெளியில் அமர்ந்தபடி இருவரும் சிறிது நேரம் பேசிவந்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த முருகானந்தம்
பாலியல் தொல்லை கொடுத்த முருகானந்தம்

முருகானந்தம் இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 13-ம் தேதி இரவு இதேபோல் பேசிக்கொண்டிருக்கும்போது முருகானந்தம் அத்துமீறி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் அதிர்ச்சியில் கூச்சலிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து `ஒரு பெண் போலீஸான எனக்கு, அதுவும் நம்ம போலீஸ் ஸ்டேஷனிலேயே பாதுகாப்பு இல்லை. என்னிடம் தவறாக நடக்க முயன்ற முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் முருகானந்தம் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து அய்யம்பேட்டைபோலீஸார் முருகானந்தத்தைக் கைதுசெய்துடன், தஞ்சாவூர் 3-ம் எண் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம், `முருகானந்தம் திருமணம் ஆனவர். அவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. ஏற்கெனவே திருச்சியில் உயரதிகாரி ஒருவருக்கு டிரைவராக இருந்தார். தனது பணியைச் சரியாகச் செய்யக்கூடிய நபர்தான். சம்பவத்தன்று ஆயுதப்படையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று தெரியவில்லை.

போலீஸ் முருகானந்தம்
போலீஸ் முருகானந்தம்
ம.அரவிந்த்

இதையடுத்து பெண் காவலர் புகார் கொடுத்ததின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உயரதிகாரி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த சர்ச்சையே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் காவல் நிலையத்திலேயே இது போன்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஒரு சில போலீஸ் எல்லை மீறி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாமல் செயல்படுவது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதை வெளியே தெரியாமல் முடித்துவிடலாம் என்ற முயற்சியும் நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும் விஷயம் வெளியே கசிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் கண்ணியத்துடனும், நேர்மையுடனும் செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றனர்,

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு