Published:Updated:

`ஜெயஸ்ரீயைக் கொலை செய்யவா மாமா அழைத்துச் சென்றார்?' - கதறிய சகோதரர்

எஸ்.மகேஷ்

சென்னையை அடுத்த புழல் பகுதியில் மனைவியைக் கொலை செய்துவிட்டு காவலர் நரேஷ், தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Jayasree
Jayasree

சென்னையை அடுத்த புழல், திருமால்நகரில் வசித்து வந்தவர் நரேஷ் (40). இவர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ (36). இவர்களுக்கு வருண் (7) என்ற மகன் உள்ளார். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்தநிலையில், நேற்று மாலை நடன வகுப்புக்குச் சென்றுவிட்டார் வருண். பின்னர் திரும்பி வந்தபோது வீடு உள்பக்கமாகப் பூட்டிக் கிடந்தது.

Representational image
Representational image

இதனைப் பார்த்தவர், `அம்மா வெளியில் சென்று இருப்பார்' எனக் கருதியவர், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் வருணின் தாய்மாமாவான சரவணன், அங்கு வந்தார். வருணிடம், `அம்மா எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவர், `வீடு பூட்டியிருக்கிறது மாமா' என்று கூறியுள்ளார். இதையடுத்து வீட்டின் கதவைப் பலமுறை தட்டினார் சரவணன். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்து ஜன்னலை உடைத்தவர், அங்கே தென்பட்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்தார்.

 `கல்லூரியில் தொடங்கியது; இன்னும் முடியவில்லை!'- திருத்தணி கொலை வழக்கில் கைதானவர்கள் வாக்குமூலம்

பூட்டிய வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சரவணனின் சகோதரி ஜெயஸ்ரீ இறந்து கிடந்தார். தூக்கில் நரேஷ் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சரவணன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்றனர். இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீஸார் விரைந்துவந்து ஜெயஸ்ரீ, நரேஷ் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீயின் உடலில் ஆங்காங்கே கத்திக்குத்து காயங்கள் இருந்தன. போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு நரேஷ் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது.

Naresh
Naresh

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காவலரான நரேஷ், குடும்பத்துடன் செம்பியம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால் மகனை அழைத்துக்கொண்டு புழல், திருமால்நகரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜெயஸ்ரீ. இதனால், நரேஷும் அங்கு சென்று தங்கியுள்ளார். அதன் பிறகும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயஸ்ரீ, பெரம்பூர் அகரம் பகுதியில் உள்ள சகோதரர் சரவணன் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு சென்ற நரேஷ், மனைவியை சமரசப்படுத்தி நேற்று காலை புழல் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு அவர் வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு இரவு வந்தபோது மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நரேஷ், மனைவி ஜெயஸ்ரீயைக் கொலை செய்துள்ளார். பிறகு, மனவேதனையடைந்த அவர், மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்" என்றனர்.

புழல் காவல் நிலையம்
புழல் காவல் நிலையம்

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,``காவலர் நரேஷ், மனைவி மற்றும் மகன் மீது அதிக பாசமாக இருந்துள்ளார். ஆனால், அவரின் மனைவியின் சில நடவடிக்கைகளால் வாழ்க்கையில் நிம்மதி இழந்து காணப்பட்டார். செம்பியம் காவலர் குடியிருப்பிலிருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அங்கு குடியிருந்தவர்கள் கூறினர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புழல் திருமால் நகருக்கு குடிபெயர்ந்தார் நரேஷ். ஆனால், அதன் பிறகும் இருவருக்குமிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

சம்பவத்தன்றுகூட கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் நரேஷ். ஆனால், இரவில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் நரேஷ். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் கொலை நடந்த வீட்டில் ஆய்வு நடத்தியபோது சில தடயங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. நரேஷ் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

Representational image
Representational image

ஜெயஸ்ரீயின் சகோதரர் சரவணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ` சம்பவத்தன்று காலையில் வீட்டுக்கு வந்த நரேஷ், ஜெயஸ்ரீயை சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டில் உள்ளவர்கள் இருவருக்கும் புத்திமதி கூறினார்கள். வீட்டிலிருந்து புறப்பட்ட ஜெயஸ்ரீ, எப்படி இருக்கிறார் என்று கேட்க அவருக்குப் போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நரேஷுக்குப் போன் செய்தபோது அவரும் பதிலளிக்கவில்லை. இதனால்தான் பெரம்பூரிலிருந்து புழலுக்கு வந்தேன். பூட்டிய வீட்டுக்குள் ஜெயஸ்ரீ கொலை செய்யப்பட்ட நிலையில், நரேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இப்படி நடக்கும் என்று கனவில்கூட நினைக்கவில்லை. ஜெயஸ்ரீயை கொலை செய்யவா மாமா (நரேஷ்) வீட்டு அழைத்துச் சென்றார்' என்றபடி கதறி அழுதுள்ளார் சரவணன்.

ஒரேநேரத்தில் அம்மாவையும் அப்பாவையும் இழந்த வருணுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். இந்தச் சம்பவம் புழல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.