Published:Updated:

`குடும்பப் பிரச்னை; மது போதையில் ரகளை!’- தட்டிக்கேட்ட எஸ்.ஐயைத் தாக்கிய புதுக்கோட்டை காவலர்

காவலர்  ஜாகீர் உசேன்
காவலர் ஜாகீர் உசேன்

மதுபோதையில் தள்ளாடிய ஜாகீர் உசேன், எஸ்.ஐ கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, எஸ்.ஐ கையில் வைத்திருந்த செல்போனைப் பறித்து சாலையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஜாகிர் உசேனுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையில் அவரின் மனைவி தன் குழந்தைகளைத் தூக்கிகொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற ஜாகீர் உசேனுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாமனாரின் சவுக்குத் தோப்பில் உள்ள மரங்களையும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

56 பக்க மாந்திரீகக் கையேடு; ஃபோர்டு கார்!-புதுக்கோட்டை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் மந்திரவாதி

அதோடு, மனைவி மற்றும் மாமானாரையும் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கணேஷ் நகர் போலீஸார் ஜாகீர் உசேனைத் தேடி வந்தனர். இதற்கிடையே, சொந்த ஊருக்குச் சென்ற ஜாகீர் உசேன் மதுபோதையில் தன் பெற்றோர்கள் மற்றும் ஊர்க்காரர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த வல்லத்திராக்கோட்டை எஸ்.ஐ பாலசுப்பிரமணியன் ஜாகீர் உசேனைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடிய ஜாகீர் உசேன், எஸ்.ஐ கன்னத்தில் ஓங்கி அறைந்ததோடு, எஸ்.ஐ கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சாலையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகச் சொல்கிறார்கள். தப்பியோடிய ஜாகீர் உசேனை போலீஸார் துரத்திப் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுபோதையில் காவலர், எஸ்.ஐயைத் தாக்கிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

`குடும்பப் பிரச்னை; மது போதையில் ரகளை!’- தட்டிக்கேட்ட எஸ்.ஐயைத் தாக்கிய புதுக்கோட்டை காவலர்

இதுபற்றி புதுக்கோட்டை நகர் போலீஸாரிடம் கேட்டபோது,``வழக்கமாக ஜாகீர் உசேன் பணியில் இருக்கும்போது மது அருந்திவிட்டு வருவது, அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடமாட்டார். தற்போது விடுமுறையில் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக மது அருந்திவிட்டு மனைவி, பெற்றோர், எஸ்.ஐ உறவினர்கள் என அனைவரையும் தாக்க முற்படுவது, தவறான மற்றும் வருத்தத்திற்குரிய செயலாகும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு