Published:Updated:

`டாஸ்மாக் கடையில் கொள்ளை; கள்ளச் சந்தையில் விற்பனை!’ - போலீஸில் சிக்கிய ஊராட்சிமன்றத் தலைவர் மகன்

 டாஸ்மாக் கொள்ளையில் கைதானவர்கள்
டாஸ்மாக் கொள்ளையில் கைதானவர்கள்

கந்தர்வக்கோட்டை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், ஊராட்சிமன்றத் தலைவர் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது கிடைக்காத விரக்தியிலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் நோக்கிலும் பலரும் டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே செங்கிப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அதில், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 600 மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனர். கொள்ளையர்களை உடனே கண்டுபிடிப்பதற்காக, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், கந்தர்வக்கோட்டைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக டாடா ஏசி வாகனத்தில் வந்த 4 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கந்தர்வக்கோட்டை டாஸ்மாக் கடை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதுடன், திருடிய மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

`குவார்ட்டர் 500 ரூபாய்; சோளக்கொல்லையில் மதுபாட்டில்'‍- சிசிடிவியால் சிக்கிய டாஸ்மாக் சூப்பர்வைசர்

இதையடுத்து, கந்தர்வக்கோட்டை அருகே நரங்கியன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன் மகன் மணிகண்டன், அவரது கூட்டாளிகளான கருப்பையா, பழனிவேல், பாக்கியராஜ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட மது பாட்டில்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூ.76,140 மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய, 2 இருசக்கர வாகனங்கள், டாடா ஏசி வாகனம், 3 செல்போன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் துரிதமாகப் பிடித்த போலீஸாரை, மாவட்ட எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

அடுத்த கட்டுரைக்கு