Published:Updated:

`இது எங்க ஏரியா, என்னைப் போகச் சொல்ற!'- ரவுடியால் போலீஸ்காரருக்கு நடந்த கொடுமை

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

கஞ்சா போதையில் பொது இடங்களில் தகராறு செய்து கொண்டிருந்த ரவுடி ஒருவர், போலீஸ்காரரை சரமாரியாக வெட்டிய சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

வெட்டப்பட்ட தலைமைக் காவலர்
வெட்டப்பட்ட தலைமைக் காவலர்

கடந்த சில தினங்களாகத் திருச்சி பொன்மலை மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்படும் கொலை மற்றும் கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களால் அப்பகுதிகள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றன. இந்நிலையில் கஞ்சா போதையில் பொது இடங்களில் தகராறு செய்து கொண்டிருந்த ரவுடி ஒருவர், போலீஸார் ஒருவரை வெட்டிச் சாய்த்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, அரியமங்கலம், உக்கடை பகுதியில் நேற்று மாலையிலிருந்து வாலிபர் ஒருவர் அப்பகுதியில் போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து வருவதாகக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இந்தத் தகவல் திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்திற்குச் சொல்லப்பட்டது. தங்களுக்கு வந்த தகவலை காவல்நிலையத்தில் இருந்த போலீஸார், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த தலைமைக் காவலர் ஹரிஹரனை தொடர்புகொண்டு சம்பவ இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டனர்.

மருத்துவமனையில் காவலர்
மருத்துவமனையில் காவலர்

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தலைமைக் காவலர் ஹரிஹரன், தகராறு செய்துகொண்டிருந்தவர், ரவுடி இஸ்மாயில் என்பதும் மீன் வியாபாரியான இவர் மீது, திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் அரியமங்கலம் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தலைமைக் காவலர் ஹரிஹரன், சம்பவ இடத்திற்கு வந்ததும் இஸ்மாயிலை அங்கிருந்து விரட்டினார்.

அப்போது ரவுடி இஸ்மாயிலுக்கும் , தலைமைக் காவலர் ஹரிஹரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இஸ்மாயில், “இது எங்க ஏரியா, எங்க வந்து என்னைய போகச் சொல்ற'' எனச் சத்தம் போட்டு தலைமைக் காவலர் ஹரிஹரனிடம் பிரச்னை செய்யவே, அவரை எச்சரித்து அனுப்பிய ஹரிஹரன் அங்கிருந்து கிளம்பினார். வழியில் நடந்த சம்பவம் குறித்து தலைமைக் காவலர் ஹரிஹரன் உயர்அதிகாரிகளுக்கு போனில் தகவல் சொல்லிக் கொண்டிருந்துள்ளார்.

Vikatan

போலீஸ் தன்னை எச்சரித்ததை தாங்கிக்கொள்ள முடியாத இஸ்மாயில், ஆத்திரத்துடன் வீட்டிற்குச் சென்று, மீன் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்ததுடன், போனில் பேசிக்கொண்டிருந்த தலைமைக் காவலர் ஹரிஹரனை சரமாரியாக வெட்டினார். இந்தத் தாக்குதலில் ஹரிஹரனுக்கு, வலது காது ஓரம், தலை, கை மற்றும் தோள்பட்டையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த நிலையிலும் ஹரிஹரன், ரவுடி இஸ்மாயிலைப் பிடிக்க முயன்றார். மேலும் வலியில் துடித்த அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள், இஸ்மாயிலை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், கையில் வைத்திருந்த கத்தியைக்காட்டி பொதுமக்களை மிரட்டிய இஸ்மாயில், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தலைமைக் காவலர் ஹரிஹரனை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் தலைமைக் காவலர் ஹரிஹரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் முத்தரசு மற்றும் போலீஸார் விரைந்து தப்பியோடிய இஸ்மாயிலை கைது செய்யத் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ரவுடி  இஸ்மாயில்
ரவுடி இஸ்மாயில்

இந்நிலையில் தலைமைக் காவலர் ஹரிஹரன் ரவுடியால் தாக்கப்பட்டது குறித்து, தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் மயில்வாகனன் மற்றும் நிஷா ஆகியோர் ஹரிஹரனை நேரில் சந்தித்து நடந்ததை விசாரித்தனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களிடம் காயங்கள் குறித்து விசாரித்ததுடன், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ரவுடி இஸ்மாயில், கஞ்சா போதையில் இருந்ததும், தலைக்கேறிய போதையில் தன்னை எச்சரித்த தலைமைக் காவலரை கத்தியால் வெட்டியதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, இஸ்மாயிலை நேற்று நள்ளிரவே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள் என்றும், போலீஸ் விசாரணையில் ரவுடி இஸ்மாயில், “எங்க ஏரியாவில் வந்து என்னையே கிளம்பிப் போகச் சொன்னதால் அவரை வெட்டினேன் “ என கூலாகச் சொன்னாராம். இதனால் நள்ளிரவுவரை பரபரப்பு நிலவியது.