Published:Updated:

குமரி: `மாமியார் வீட்டில் செருப்பால் அடித்தனர்' - 22 பக்கக் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான காவலர்!

காவலர் ஜினிகுமார்
காவலர் ஜினிகுமார்

'என் பெயரிலுள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுதிவைக்கக் கூறி கட்டாயப்படுத்தினர். அதற்குச் சம்மதிக்காததால், என்னைத் தாக்கினார்கள்' எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் காவலர் ஜினிகுமார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகேயுள்ள சிதறாமல் பின்னமூட்டுவிளையைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுக்கு ஷிஷன்சிங் (9), ஷைஷா (6) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், சென்னையிலிருந்து மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வந்த ஜினிகுமார், அன்று இரவு தனது வீட்டில் தூங்கியிருக்கிறார். மறுநாள் காலையில் வீட்டில் பார்த்தபோது அவரைக் காணவில்லை. இதனால், அவரின் தந்தை பர்னபாஸ் வீடுமுழுவதும் தேடியிருக்கிறார். அப்போது ஜினிகுமார் தன் கைப்பட 22 பக்கங்களுக்குக் கடிதம் எழுதிவைத்திருந்ததை அவரது தந்தை கண்டுபிடித்திருக்கிறார். கடிதம் எழுதி வைத்துவிட்டு மகன் திடீரென மாயமாகியிருப்பது குறித்து பர்னபாஸ் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காவல் நிலையத்தில் 22 பக்கக் கடிதத்தையும் ஒப்படைத்தார்.

மனைவி குழந்தைகளுடன் ஜினிகுமார்
மனைவி குழந்தைகளுடன் ஜினிகுமார்

அந்தக் கடிதத்தில், ``என் பெற்றோர் செங்கல் சூளையில் வேலை செய்து என்னை ஆளாக்கினாகள். வறுமை காரணமாக பெற்றோர் என்னை 12-ம் வகுப்பு வரைதான் படிக்கவைத்தனர். அதன் பிறகு நான் தனிப்பட்ட முறையில் படித்து காவலர் தேர்வு எழுதி, நான் மிகவும் நேசித்த போலீஸ் பணியில் சேர்ந்தேன். எனக்குத் திருமணமான சிறிது நாள்களில் மாமனார் வீட்டில் விருந்துக்குச் சென்றபோது, என் மனைவி அவரின் தாயாரின் சொல் கேட்டு நடந்ததால், அவமானப்படுத்தப்பட்டேன். என் மனைவி அவர் அம்மாவின் பேச்சைக் கேட்டு நடந்ததால், எங்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது.

`போலீஸ் ஸ்டேஷனில் பைக்குகளைத் திருடியது ஏன்?’ - கூடங்குளம் பெண் காவலர் வாக்குமூலம்

முதலில் மனைவி என்னிடம் அன்பாக நடந்துகொண்டார். இதனால் நான் என் பெயரிலும், மனைவி பெயரிலும் சொத்து வாங்கினேன். அன்பான மனைவி அவரின் அம்மாவின் பேச்சைக் கேட்டு என் பணத்தின் மீதும், சொத்து மீதும்கொண்ட ஆசையால் என்னை மதிக்காமல் நடந்துகொண்டார். என் மனைவி என்னிடம் சொல்லாமல் குழந்தைகளுடன், தனது தாய் வீட்டுக்குப் போய்விட்டார். சென்னையிலிருந்து விடுப்பு பெற்றுவிட்டு கடந்த 6-ம் தேதி நட்டாலத்திலுள்ள அவரின் தாய் வீட்டுக்கு, என் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றேன்.

ஜினிகுமார்
ஜினிகுமார்

அப்போது மனைவி மற்றும் மைத்துனர், மாமியார் லலிதா உள்ளிட்டோர், என் பெயரிலுள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுதிவைக்கக் கூறிக் கட்டாயப்படுத்தினர். அதற்குச் சம்மதிக்காததால் என்னைத் தாக்கினார்கள். கையைப் பிடித்து வைத்துக்கொண்டு செருப்பால் என்னை அடித்தனர். எனவே, நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போகிறேன். அப்பா, நீங்கள் சட்டபூர்வமாகச் சொத்துகளை உரிமையாக்கி, உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அவரது மொபைல் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. புகாரின்பேரில் அருமனை போலீஸார் ஜினிகுமாரை தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு