Published:Updated:

`பிடதிக்குள் காவல்துறை.. இடமாற்றப்பட்ட பணம், நகை?'- நித்யானந்தாவுக்கு பிடி இறுகுகிறது!

குஜராத் மாநிலக் காவல்துறை நித்யானந்தா சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களைத் தோண்டிவருகிறது. இதன் தொடர்ச்சியாக அஹமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை ஏற்கெனவே சோதனை செய்திருந்தனர்.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தா விவகாரத்தில் இனி வில்லங்கத்துக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள். பிடதியை குறிவைத்து காவல்துறை இன்று களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிடதி ஆசிரமம்
பிடதி ஆசிரமம்

நித்யானந்தாவின் தனிச்செயலாளராக இருந்த ஜனார்த்தன ஷர்மா தன் இரண்டு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டதாக குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஷர்மாவின் மகள் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குஜராத் காவல்துறையினர் நித்யானந்தா இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

``இதெல்லாம் மக்களின் வரிப்பணம் இல்லையா?'' - ரவீந்திரநாத் குமாருக்கு பத்து கேள்விகள்!

இந்த நிலையில், குஜராத் மாநிலக் காவல்துறை நித்யானந்தா சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்களைத் தோண்டிவருகிறது. இதன் தொடர்ச்சியாக அஹமதாபாத்தில் உள்ள அவரின் ஆசிரமத்தை ஏற்கெனவே சோதனை செய்திருந்தனர். இந்த நிலையில், நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமமாகக் கருதப்படும் கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்த விவரம் ஏற்கெனவே நித்தியானந்தாவின் ஆட்களுக்குத் தெரிந்து நேற்று முன்தினம் மா அச்சலா மற்றும் ரிஷி ஆத்மானந்தா ஆகிய இருவர் பிடதி ஆசிரமத்துக்கு வருகை தந்துள்ளார்கள் என்றும், அங்கு நித்யானந்தாவுக்கு அன்பளிப்பாகவும், துலாபாரமாக கிடைத்த தங்க ஆபரணங்களை ஆசிரமத்திலிருந்து எடுத்துச்செல்ல வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் அவசரப்படுத்தியுள்ளார்கள் என்றும், உடனடியாக நித்யானந்தாவின் அறைக்கு அருகே இருந்த அறையிலிருந்து தங்க ஆபரணங்களை வெளியே எடுத்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு மேல் தங்க நகைகள் அங்கு இருந்ததாகவும், அதோடு பல கோடி ரூபாய் பணமும் அங்கிருந்தாகவும் கூறப்படுகிறது. இதில் தங்க நகைகளை கர்நாடகாவிலிருந்து தமிழக எல்லைக்குள் கொண்டுவந்துவிட்டனர். அங்கிருந்த பணத்தை மட்டும் நடிகை ரஞ்சிதா தனது பொறுப்பில் எடுத்துச்சென்றுள்ளார் எனக் கூறுகின்றனர். இப்போது பிடதியில் முக்கிய நிர்வாகிகளோ, விலையுயர்ந்த பொருள்களோ எதுவும் இல்லை. இந்த நிலையில், பிடதியில் சோதனை நடத்துவதற்காக குஜராத் மாநில போலீஸார் கர்நாடகாவை நோக்கி வந்துகொண்டுள்ளனர்.

நித்யானந்தா ஆசிரமம்
நித்யானந்தா ஆசிரமம்

அவர்கள் பிடதிக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் நித்யானந்தாவின் செயல்பாடுகள் மற்றும் ஜனார்த்தன ஷர்மாவின் மகள் குறித்த விவரங்களைக் கேட்டறிய உள்ளார்கள். இந்த நிலையில், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விரைவில் பிடதி ஆசிரமத்துக்கு வருகை தர உள்ளார்கள். பிடதி ஆசிரமத்தை வைத்து நித்யானந்தாவுக்கு பிடி இறுகும் என்று தெரிகிறது.