Published:Updated:

`10 பேரைக் கண்காணித்தோம்; ஒருவர்மீது சந்தேகம்!'‍- வீரத்தம்பதி வழக்கில் குற்றவாளியை நெருங்கியதுபோலீஸ்

நெல்லை மாவட்டம் கடையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்துவந்த தம்பதியைத் தாக்கிக் கொள்ளையடிக்க வந்த கும்பல் விரட்டியடிக்கப்பட்டது. அந்த தம்பதியைத் தாக்கிய கொள்ளையர் விரைவில் பிடிபடுவார்கள் எனக் காவல்துறை டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.

வீரத் தம்பதி சண்முகவேல்-செந்தாமரை
வீரத் தம்பதி சண்முகவேல்-செந்தாமரை

நெல்லை மாவட்டம், கடையத்தைச் சேர்ந்தவர், சண்முகவேல். தனியார் நூற்பாலையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் மனைவி செந்தாமரையுடன் தோட்டத்தில் வீடு கட்டிக் குடியிருந்துவருகிறார். அவரது இரு மகன்கள் வெளிமாவட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

வீரத் தம்பதி
வீரத் தம்பதி

கடையத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர்கள் தனியாக வசித்து வருவதால், வீட்டைச் சுற்றிலும் 14 சிசிடிவி கேமரா வைத்திருந்தனர். இந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வீட்டுக்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த இரு மர்ம நபர்கள் அரிவாளால் மிரட்டியபோதிலும், அச்சமடையாத இருவரும் சேர்ந்து கொள்ளையரை அடித்து விரட்டினார்கள். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகப் பரவியதால் சுதந்திர தினத்தன்று இருவருக்கும் முதல்வரின் வீரதீர விருது வழங்கப்பட்டது.

உண்மையான குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களைப் பிடித்துச் சென்று துன்புறுத்துகிறார்கள்.
பொதுமக்கள்
வீரத் தம்பதி வீட்டை நோட்டமிட்டனர்; இரவில் நடந்த போலீஸ் சேஸிங்!- பைக்கில் தப்பிய மர்ம நபர்கள்

முதியவர்களின் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் யார் என்பது தொடர்பாகக் கடையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சண்முகவேல் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தனிப்படை போலீஸார் முயன்றனர்.

குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் காவல்துறைக்குச் சிரமம் ஏற்பட்டதுடன் சிறிய க்ளூ கூடக் கிடைக்கவில்லை. அதனால் சுற்றுப்புறக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களை அவசியமின்றி காவல்துறையினர் துன்புறுத்துவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் சரக டி.எஸ்.பி-யாக சுபாஷினி நியமிக்கப்பட்டார்.

அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி சுபாஷினி
அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி சுபாஷினி

ஆலங்குளம் பகுதியில் அவர் பணியாற்றியபோது திறமையாகச் செயல்பட்டதுடன், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்க முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டவர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் காட்டிய ஆர்வம் காரணமாக அம்பாசமுத்திரத்துக்கு மாற்றப்பட்டார். அவர் பொறுப்பேற்றதும் இந்த வழக்கில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டார்.

கொள்ளை முயற்சி நடந்து ஒன்றரை மாதங்களான நிலையில், இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றிப் பேசிய நெல்லை சரக டி.ஐ.ஜி-யான பிரவீன்குமார் அபினவ், ‘’கடையத்தில் முதியவர்களிடம் கொள்ளையடிக்க நடந்த முயற்சி குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினவ்
நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினவ்

இந்த வழக்கு தொடர்பாக அந்தப் பகுதிகளில் உள்ள 12 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து தகவல் சேகரிக்கப்பட்டிருக்கிறது. சிறையில் இருக்கும் சிலரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். இதுவரை 10 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணித்தோம். அதில் ஒருவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. அதனால் ஆதாரங்களின் அடிப்படையில் அவரை விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ஒரு வாரத்தில் பிடிபடுவார்கள்’’ என்றார்.