Published:Updated:

பொன்னேரி சிறை: `காசு கொடுத்தால் கைதியைப் பார்க்கலாம்!’ - வைரல் வீடியோவும் சர்ச்சையும்

சிறைக் கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சம் வாங்கும் காவலர்கள்
சிறைக் கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சம் வாங்கும் காவலர்கள்

பொன்னேரி கிளைச் சிறையில் கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு காவலர்கள் உள்ளே அனுமதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில் பொன்னேரி கிளைச் சிறை இயங்கிவருகிறது. இந்தக் கிளைச் சிறையில் அடிதடி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சிறு குற்றங்கள் புரிவோர் விசாரணைக் கைதிகளாக நீதிமன்றக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கும் இந்தச் சிறையில், கைதிகளின் உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்கு சிறைத்துறை பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறது. பொதுவாக முறையான காரணங்களுக்காகவும், முறையான ஆவணங்கள் இருந்தாலும் மட்டுமே கைதிகளைச் சந்தித்துப் பேச உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஆனால், பொன்னேரி கிளைச் சிறையில் சமீபகாலமாக விசாரணை கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்களிடம், சிறைக் காவலர்கள் 500 முதல் 2,000 ரூபாய் வரையில் பணம் வாங்கிக்கொண்டு நேர வரைமுறையின்றி அனுமதித்துவருவதாகவும், பணமில்லாமல் கைதிகளைச் சந்திக்க வருபவர்களை அலைக்கழித்து விரட்டியடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணமாக இருந்துவருகிறது.

சிறைக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கைதிகளின் உறவினர்கள்
சிறைக் காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் கைதிகளின் உறவினர்கள்

இந்தநிலையில், பொன்னேரி கிளைச் சிறையின் வாயிலில் நின்றுகொண்டு கைதிகளைச் சந்திப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கும் உறவினர்கள், சிறையின் ஜன்னல் வழியாக காவலர்களுக்கு லஞ்சப் பணத்தை அளித்துவிட்டு, கைதியின் பெயர்களைக் காவலர்களிடம் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வைரல் வீடியோவில், சிறைக்குள் இருக்கும் காவலர்கள் கைதிகளைச் சந்திக்க காத்துக்கொண்டிருக்கும் உறவினர்களிடம் ஜன்னல் வழியாக ரூபாய் 500, 1,000 எனப் பெற்றுக்கொண்டு, 'யாரைப் பார்க்கப் போறீங்க... பேரச் சொல்லுங்க, ஒருத்தரைதான் விடுவோம். காசு இருக்குறவங்க மட்டும் நில்லுங்க' என்று சிறைக் காவலர்கள் கூறுகின்றனர். பணத்தைக் கொடுத்தவர்கள் காத்துக்கொண்டிருக்க, பணமில்லாதார்கள் புலம்பிய படி நடையைக் கட்டுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் வேளையில், பொன்னேரி சிறையில் காவலர்கள் தன்னிடம் லஞ்சம் கேட்டு அராஜகம் செய்ததாக பெண் ஒருவர் மற்றுமொரு வீடியோவில் குற்றம்சாட்டுகிறார்.

அந்த வீடியோவில், ``என்னோட சொந்தகாரங்க ஒருத்தங்க பொன்னேரி சப் ஜெயில்ல இருக்குறாங்க. அவங்கலைப் பார்த்து பேசிட்டு, மாற்றுத் துணி கொடுக்க நான் ரெண்டு மூணு நாளா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். போலீஸ்காரங்க 2,000 ரூபாய் கொடுத்தாதான் உள்ளே விடுவோம்னு அராஜகம் பண்றாங்க. நானும் எவ்ளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன்.. அவங்க விடவே இல்லை. அதனால, இன்னைக்குக் கையில இருந்த 500 ரூபாயைக் கொடுத்து `இவ்ளோதான் சார் இருக்கு’னு சொன்னேன். அதுக்குப் பிறகு, அந்தக் காசை வாங்கிக்கிட்டு உள்ளே கொஞ்சம் நேரம் பேச விட்டாங்க. இங்கே காசு இல்லாம கைதிங்க யாரையுமே சந்திக்க முடியாது. ஜெயில்ல இருக்குறவங்களைப் பார்க்க வர்றவங்க எல்லாரும் ஏழைங்கதான். அதனால, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இது தொடர்பா நடவடிக்கை எடுக்கணும்" என்று அந்தப் பெண் உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கிறார்.

அந்த வீடியோவும் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.

காவலர்கள் மீது குற்றம் சுமத்தும் பெண்
காவலர்கள் மீது குற்றம் சுமத்தும் பெண்

கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் பொன்னேரி கிளை சிறைக் காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிறைத்துறையை வலியுறுத்திவருகின்றனர்.

இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கும் வீடியோ குறித்து பொன்னேரி கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் சுயம்புலிங்கத்தைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். ``ஆமாம். அந்த வீடியோ இங்கேதான் எடுத்தது (பொன்னேரி கிளை சிறை). நான்தான் இங்கே ஜெயிலுக்கு இன்-சார்ஜ். ஆனா, எனக்கு எதுவும் தெரியாது. நீங்க உயரதிகாரிங்ககிட்டதான் கேட்கணும். எனக்கு எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார். இந்த வைரல் வீடியோ தொடர்பாக உயரதிகாரிகள் விளக்கம் அளித்தால், அதையும் உரிய பரீசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு