Published:Updated:

`தொழிற்சாலை கழிவறைக்குள் சடலங்கள்; தலைமறைவான செக்யூரிட்டிகள்!' - என்ன நடந்தது?

ரத்தன்போராவுடன் வேலைப்பார்த்த செக்யூரிட்டிகளும் சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். அதன்பிறகுதான் ரத்தன்போராவும், சிறுமியும் உயிரிழந்திருக்கின்றனர்.

சென்னை, குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடந்த தீ விபத்து காரணமாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலையில் செக்யூரிட்டிகள் மட்டுமே காவல்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து சில தினங்களுக்கு முன் துர்நாற்றம் வீசுவதாகக் குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் தொழிற்சாலைக்குள் பார்த்தபோது அங்கிருந்த கழிவறையில் ஆண் சடலம், பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்திருக்கிறது. அதையடுத்து போலீஸார், உடனடியாக சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை
தற்கொலை
சித்தரிப்புப் படம்
 `சித்தி மகளைக் காதல் திருமணம் செய்ததால் இளைஞர் கடத்திக் கொலை?!'- திருத்தணியில் பரபரப்பு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கழிவறையில் இறந்து கிடந்தவர், அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ரத்தன்போரா (25) எனத் தெரியவந்தது. இவர் இந்தத் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்திருக்கிறார். அவருடன் இறந்து கிடந்தது சிறுமி. அந்த சிறுமி ரத்தன்போராவின் உறவினர். இவர்கள் இருவரும் பழகிவந்ததை அவர்களின் உறவினர்கள் கண்டித்திருக்கின்றனர். அதனால், சிறுமி சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அதுதொடர்பாக வந்த புகாரில் சிறுமியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தோம். இந்தச் சூழலில் மீண்டும் சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி ரத்தன்போரா வேலைப்பார்க்கும் தனியார் தொழிற்சாலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு ரத்தன்போராவுடன் வேலைப்பார்த்த செக்யூரிட்டிகளும் சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றனர். அதன்பிறகுதான் ரத்தன்போராவும் சிறுமியும் உயிரிழந்திருக்கின்றனர். ரத்தன்போராவுடன் வேலைப்பார்த்த செக்யூரிட்டிகள் தலைமறைவாக இருப்பதால், சந்தேகம் வலுக்கிறது. அவர்களிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் செக்யூரிட்டிகள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு, ரத்தன்போராவையும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு