சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் சென்னை பெருநகர காவல், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் ஒருங்கிணைந்து கடல் நீரில் மூழ்குபவர்களை மீட்கும் பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 127.2022-ம் தேதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் வேகமாக கடற்கரை பகுதியில் நடந்துச் சென்றார். அவரைக் கவனித்த போலீஸார், அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடற்கரையிலிருந்து இளம்பெண், கடலை நோக்கி ஓடினார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த போலீஸார், இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சிறப்பு படை 12-ம் அணி காவலர்கள் சுரேஷ், கோபிநாத் ஆகிய இருவரும் மின்னல் வேகத்தில் இளம்பெண்ணை மீட்க கடல் நீரில் இறங்கினர். அடுத்த சில நிமிட போராட்டத்துக்குப்பிறகு அந்த இளம்பெண்ணை மீட்ட காவலர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரித்தபோது இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீஸார், ``கடலுக்குள் மூழ்கி தற்கொலைசெய்ய முயற்சிசெய்த இளம்பெண், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கல்லூரி படிப்பு தொடர்பாக அவர், மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். அதனால்தான் இந்த விபரீத முடிவை எடுக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்தச் சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளார்" என்றனர்.